கல்முனை கொலைச் சம்பவம்; ஒருவர் பாராட்டப்பட்டார்

0
451

KMC-2கல்முனை சர்வோதய நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவரை வெட்டிக் கொலை செய்த சந்தேக நபரை உடனடியாக கண்டுபிடித்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கப்பாருக்கு கல்முனை மாநகர சபை அமர்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று (29) திங்கட்கிழமை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் இவ்விடயத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது,

KMC1“நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நீண்ட காலமாக புலன் விசாரணைகள் நடைபெற்றும் அவற்றின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை.

ஆனால் கடந்த சனிக்கிழமை கல்முனை சர்வோதய நிதிக் கம்பனியில் வைத்து அதன் உதவி முகாமையாளரான பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு சில மனி நேரத்திலயே அதே இடத்தில் வைத்து கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நமது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் திறமை, மதிநுட்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையின் காரணமாகவே கொலையாளி இவ்வளவு இலகுவாக கையும் மெய்யுமாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.

ஆகையினால் ஒரு பொறுப்புவாய்ந்த பொலிஸ் அதிகாரி என்ற ரீதியில் தனது கடமையை மிகவும் நேர்மையாகவும் துணிச்சசலாகவும் மேற்கொண்ட பொறுப்பதிகாரியையும் அவருக்கு துணை நின்ற ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் மக்கள் இறைமை கொண்ட இந்த உயர்ந்த சபையில் நாம் பாராட்டுகின்றோம். இது ஏனைய பொலிசாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்” என்று கூறினார்.

இதனை வழிமொழிந்து உரையாற்றிய மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஜெயக்குமார் தெரிவித்ததாவது;

KMC-4“குறித்த கொலைச் சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. மக்கள் அணிதிரண்டிருந்தனர். போக்குவரத்துகளும் தடைப்பட்டிருந்தது. எனினும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நிலைமையை மிகவும் சாதுர்யமாக சீர்படுத்தியிருந்தனர்.

அந்த இடத்தில் வேறு எந்த விதமான அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் பொலிஸ் பொறுப்பதிகாரி மிகவும் நேர்மையாக புலன் விசாரணைகளை மேற்கொண்டு அந்த இடத்திலேயே கொலையாளியை அதிரடியாக கைது செய்து எம்மை வியக்க வைத்தார்.

இப்பகுதியில் முன்பும் காலத்திற்கு காலம் கொலைகள் நடந்து வந்துள்ளன. ஆனால் இப்படியொரு கொலையும் இப்படியொரு கண்டுபிடிப்பும் நடந்ததாக நாம் அறியவில்லை.

அதற்காக பொலிஸ் பொறுப்பதிகாரியையும் ஏனைய பொலிசாரையும் மக்கள் சார்பில் இந்த மாநகர சபை பாராட்டுவது பொருத்தமாகும்” என்று கூறினார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

LEAVE A REPLY