9 முக்கிய விடயங்கள் அடங்கிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையத்தினால் அரசியலமைப்புச் சீர்திருத்த குழுவுக்கு முன்வைப்பு

0
378

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையத்தினால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த 26 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா மண்டபத்தில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வின் போதே முன்வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையத்தின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) தெரிவித்தார்.

குறித்த மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையத்தின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…..

பல் சமயக் கருத்தாடல் நிலையமானது இலங்கையில் பின்பற்றப்படும் பிரதான சமயங்களுக்கூடாக முரண்பாட்டினை நிலைமாற்றம் செய்து மீளிணக்கம், சகவாழ்வு, சமாதானத்தினைக் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்டு செயற்படும் ஒரு அமைப்பாகும்.

2008ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மிக உக்கிரமடைந்த சூழலிலும், அவ்யுத்தத்தினையும், ஏனைய பிற காரணங்களை ஊக்குவிப்பதிலும் சமயமும் ஒரு கருவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில் சமயங்களுக்கூடாக அல்லது சமயத்தலைவர்கள் ஊடாக முரண்பாடுகளை நிலைமாற்றம் செய்து சமயப் போதனைகள் எவ்வாறு சமாதான, சகவாழ்வு, மீளிணக்க வேலைத்திட்டத்திற்கு வழிகாட்டுகின்றது என்பதனை மக்கள் மயப்படுத்துவதற்காகவும் அதனூடாக இலங்கையின் பல்லினத் தன்மைக் கேற்றவாறு ஆன்மிக, கல்வி, கலை, கலாசார, பொருளாதார அரசியல், ஊடகம், சார்ந்த புதிய கொள்கை வகுப்பாக்கம் ஒன்றினை மேற்கொள்ளலாம் என்ற விடயத்தில் நாம் கடந்த 8 ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகிறோம்.

அப்பயணத்தில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத் தலைவர்களையும் அச்சமயங்களைப் பின்பற்றும் பொது மக்களையும் காலி, அனுராதபுரம், ஹட்டன், மட்டக்களப்பு, அம்பாறை, பெலியத்த போன்ற பிரதேசங்களில் சந்தித்து கலந்துரையாடி பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

அதன் தொடரில் இவ் ஆறு பிரதேசங்களிலும் பல் சமய கருத்தாடல் நிலையங்களை 2008 இல் நிறுவி அதனூடாக மீளிணக்கம், சகவாழ்வு, சமாதானத்தினைக் கட்டியெழுப்பும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

2014 – 2015 ஆம் ஆண்டு வரை நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை வினைத்திறனாக ஜனநாயக செயன்முறையுடன் இணைக்கும் வகையில் சமூகக் கருத்தறிதல் செயன்முறை ஒன்றினை நாம் மேற்கொண்டோம்.

அக் கருத்தறிதல் செயற்பாட்டில் சிறுவர்கள், முதியோர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், சமயத்தலைவர்கள் என்ற தரப்புக்களை 60 கிராமங்களில் சந்தித்து நாம் திரட்டிய அவர்களது கருத்துக்களில் கூட்டிணைந்த 67சமுதாயப் பரிந்துரைகளிலே 6 பிரதான கருப் பொருட்களைச் சுருக்கி 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் மன்றத்தில் நாம் முன்வைத்தோம்.

அந்த 6 விடயங்களும் பின்வருவன :

01. மீளிணக்கம் மற்றும் நிரந்தர சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி முழுக் கல்வி முறைமையையும் மாற்றியமைத்தல்.

02. மும்மொழிக் கொள்கையை அதிக வினைத்திறன் மிக்கதாகவும், செயற்திறன் மிக்கதாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக அவசியமான அகக்கட்டமைப்பு வசதிகளையும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள்,தனிப்பட்ட இயலுமைகளையும் விருத்தி செய்தல்.

03. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகளை ஆற்றுப்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் வேலைத்திட்டம் ஒன்றினை மற்றும் நிறுவனமொன்றை அமைத்தல்.

04. தேசிய மட்டத்தில் பல்சமயப் பேரவை ஒன்றை நிறுவி முன் எச்சரிக்கை முறைமையாலும் மற்றும் இன ரீதியான, மதரீதியான முரண்பாடுகளை இயலுமானளவு குறைப்பதன் ஊடாகவும் தேசிய மீளிணக்கத்தை அடைந்து கொள்ளல்.

05. மீளிணக்கம் மற்றும் சகவாழ்விற்கு அவசியப்படும் ஊடகக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான மனித ஆற்றல் மற்றும் அகக் கட்டமைப்பு வசதிகளை ஊக்குவித்தல்.

06. மீளிணக்கம் மற்றும் சகவாழ்விற்காக அவசியப்படும் சமத்துவத் தன்மையை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்தும் கனவுடன் கூடிய எதிர்கால இலங்கையை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு சீர்திருத்தமொன்றை அறிமுகப்படுத்தல்.

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பொது மக்களின் விருப்பமாகிய அரசியலமைப்பு மாற்றம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பிற்கமையவும் எமது பல் சமயக் கருத்தாடல் நிலையங்களின் பங்குபற்றுனர்களின் எதிர்பார்ப்பிற்கமையவும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தினையும், இது தொடர்பில் எடுக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எமது பல்சமயக் கருத்தாடல் நிலையமானது வரவேற்பதோடு இதற்கான பூரணமான எமது ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்தவகையில் அரசியலமைப்பு மாற்றத்தின் போது பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பல் சமயக் கருத்தாடல் நிலையமானது தனது முன்மொழிவுகளை முன்வைக்கின்றது.

01. இலங்கையானது அங்கு வாழும் அனைத்துத் தரப்பினருக்கும் சொந்தமானது என்பதனை மிகத் தெளிவாக வரையறை செய்வதோடு அது தொடர்பாக அரசியலமைப்பின் முன்னுரையில் (Pசநயஅடிடந) மிகத் தெளிவாகவும் குறிப்பிடப்படல் வேண்டும்.

02. நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் கொண்டுள்ள அதிகாரங்கள் எவை? கொண்டிராத அதிகாரங்கள் எவை? என்பன தெளிவாக வரையறை செய்யப்படல் வேண்டும்.

03. மாகாண சபைகளுக்கு அரசியலமைப்ப மூலம் வரையறை செய்யப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு எவ்வித தலையீட்டினையும் பலப்பிரயோகத்தினையும் செய்யாத வகையில் சட்ட ஏற்பாடுகள் முன்வைக்கப்படல் வேண்டும்.

04. இலங்கை பல சமயங்களைப் பின்பற்றும் நாடு என்ற வகையில் சமய சுதந்திரமானது. அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்படுவதோடு, பின்பற்றப்படும் அனைத்து சமயங்களுக்கும் சமத்துவமான இடமளிக்கப்படல் வேண்டும்.

05. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பான ஷரத்துக்களில் பின்வரும் விடயங்கள் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

(1) வாழ்வதற்கான உரிமை
(2) தொழில் பெறுவதற்கான உரிமை
(3) கல்வியுரிமை
(4) சுகாதார உரிமை

06. இவ்வடிப்படை உரிமைகள் தொடர்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்க முடியாதவிடத்து சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் மேன்முறையீடு செய்வதற்கான உரிமையும் அரசியலமைப்பில் உறுதி செய்யப்படல் வேண்டும்.

07. ஒரு பிரதேசமானது தனது மக்களின் பெருக்கம், சன அடர்த்தி , குடியிருப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் என்பவற்றினால் எதிர் நோக்கும் நில ரீதியான பிரச்சினை காரணமாக தமக்கான காணி தேவைப்படும் போது அதனைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை தொடர்பில் விஷேட ஏற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தப்படல்.

08. அரசியலமைப்பினை நாட்டின் பிரஜைகள் அனைவரும் வாசித்து விளங்கிக் கொள்ளக்கூடிய வகையிலான மொழிக் கையாள்கை மேற்கொள்ளப்படல் வேண்டும். அவ்வாறே அதன் மொழிபெயர்ப்புக்கள் மிகச் சரியாகவும் சரளமாகவும் மேற்கொள்ளப்பட்டு சகல மக்களுக்கும் கிடைக்க வழிவகுக்க வேண்டும்.

09. சட்ட யாப்புக் கல்வி என்ற ஒரு பாடப்பரப்பு பாடசாலைகளில் கட்டாயமாக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் இலங்கையின் அரசியலமைப்பு கற்பிக்கப்பட்டு அறிவூட்டப்படல் வேண்டும்

போன்ற அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் 9 ஒன்பதும்மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையத்தின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) உட்பட அதன் பிரதிநிதிகளான அருட்சகோதரி மெடலின்,குருக்கல் சன்முகதாஸ் ஆகியோரினால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவுக்கு எழுத்து மூலம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

04fe2632-6cb6-479d-b5ff-ed1ec396991e 68a4163f-dbd3-4319-a919-c2b34e28d8bf abd00ff0-9ae8-412e-a96d-4ed48174a8e9 cea28da5-f41d-4ec4-9b8f-288eae9acc7c dc00eb74-35b4-4a72-9b9e-85d20e123511

LEAVE A REPLY