பெற்றோர்களின் நெறிப்படுத்தலில்தான் பிள்ளைகள் பாதுகாக்கப்படுகின்றனர்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

0
194

எமது சமூகத்தில் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரங்கள், இளவயதுக் காதல் விவகாரங்கள் போன்றவற்றினால்; சிறுவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இவர்களின் அன்பைப் பயன்படுத்தி எழுதிய கடிதங்கள், குறுஞ் செய்திகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் முகநூல்கள் இன்று சாட்சியாக பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய சமூக மட்டத்திலும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

சிறுவர்கள் மென்மையானவர்கள், சுதந்திரமாக வளர்வதற்கு உரித்துடையவர்கள் அவர்கள் மீதான கட்டுப்பாடுகள் மிருதுவாகவும் காயப்படுத்தாதவையாகவும் இருத்தல் வேண்டும்.

அதிகமான சம்பவங்கள் பெற்றோரை பகைத்துக் கொண்டு செய்தவையாகவே இருக்கின்றது.
ஒவ்வொரு பிள்ளைகளினதும் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை கட்டுக் கோப்புக்குள் கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதூர் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு நிலையத்தில் அதன் முகாமையாளரின் தலைமையில் அண்மையில் பயனாளிகளுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

பெற்றோர்கள் கடினமாக உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாய தேவைக்கு ஆளாகுகின்றனர்.

அது மட்டுமன்றி, குடும்பச் சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும், சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலமாக சிறுவர்கள் உடல், உள ரீதியான வேதனைகளை அடைகின்றனர்.

எம்மில் அநேகமானவர்களுக்கு பாலியல் தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும்.

இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி, இக் குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிறுவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது, ஒருவரைத் துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது.

ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

இக்குற்றத்திற்கான தண்டணையானது, பத்து வருட சிறைத் தண்டணையும், தண்டப்பணத்துடன் அல்லது தண்டப் பணம் இன்றி மேலும் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தமானது என கருதும் நட்ட ஈட்டினை கொடுக்கும்படி நீதிபதி கட்டளையிட வாய்ப்புண்டு என அப்துல் அஸீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

LEAVE A REPLY