7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டை வீழ்த்தியது பாகிஸ்தான்

0
70

ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் மிர்புரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அம்ஜத் ஜாவேத் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்கள் ரோகன் முஸ்தபா, முகமது கலீம் ஆகியோர் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகினர். முகமது சமீத் 5 ரன்களும், உஸ்மான் முஸ்தாக் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அதேசமயம், 4-வது வீரராக களமிறங்கிய ஷாய்மன் அன்வர் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக அப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 46 ரன்களில் அவுட் ஆனார்.

அவரைத்தொடர்ந்து முகமது உஸ்மான்-கேப்டன் அம்ஜத் ஜாவேத் ஜோடியும் பொறுப்புடன் விளையாடியது. முகமது உஸ்மான் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் அமீரகம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அஜ்மத் ஜாவேத் 27 ரன்களுடனும், முகமது நவீத் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர், முகமது இர்பான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முகமது ஹபீஸ், ஷர்ஜீல் கான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 1.3 ஓவரில் ஷர்ஜீத் 4 ரன்களில் அம்ஜட் ஜவிட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரிலேயே ஹபீஸ் 11 ரன்களில் தனது விக்கெட்டுக்களை பறிகொடுத்தார். மீண்டும் தனது அடுத்த ஓவரில் அம்ஜட் மன்ஜூரை டக்-அவுட் ஆக்கினார். இதனால் பாகிஸ்தான் அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, உமர் அக்மல் மற்றும் ஷோயிப் மாலிக் இருவரும் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் அணி 10.3 ஓவர்களில் தான் 50 ரன்களை எட்டியது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 86 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தது. ஷோயிப் மாலிக் 44 பந்துகளிலும், உமர் அக்மால் 46 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 17 மற்றும் 18-வது ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் மாலிக், அக்மல் ஜோடி 30 ரன்கள் விளாசியது. இதனால் 18.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்டை வீழ்த்தியது.

பாகிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த ஷோயிப் மாலிக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இதனையடுத்து நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

LEAVE A REPLY