திட்டத் தயாரிப்பில் ஆயுத வன்முறைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுகோள்

0
190

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவுகளில் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும்போது ஆயுத வன்முறைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவும் திட்டங்களை வகுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் மனோன்மணி தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சமூக ஆளுகையை அடைவதனை இலக்காகக் கொண்டு கொள்கை வலுப்பெறச் செய்தல் மற்றும் பிரஜைகளின் ஈடுபாட்டுடன் திட்டங்களை செயற்படுத்துதல் எனும் விடயத்திற்காக வெல்லாவெளி மற்றும் கொக்கட்டிச்சோலை பிரதேச சபைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து தான் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக இந்த வேண்டுகோளை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள் மற்றும் திட்ட அமுலாக்கலுக்குப் பொறுப்பான “ஜனதாக்ஸன்” நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோரிடம் தான் இந்த வேண்டுகோளை முன்வைத்திருப்பதாக மனோன்மணி மேலும் கூறினார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், இந்த இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள விதவைக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்காகவும் பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காகவும் பெருஞ் சிரமப்படுகின்றார்கள்.

பொதுவாக அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும்போது வீதிகள், நீர் விநியோகம், வீட்டுத் திட்டம் போன்றவையே கவனத்தில் எடுக்கப்படுகின்றன. அந்த அடிப்படை வசதிகள் தேவையாக இருக்கின்றபோதிலும் கூட, வாழ்வாதாரத் தொழிலுக்கு ஊக்கமளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் நிறைந்து காணப்படும் இயற்கை வளங்களை குறிப்பாக வாவி களப்பு, விவசாயம், தென்னை தும்புக் கைத்தொழில், விவசாயப் பண்ணை, ஆடை உற்பத்தி இதுபோன்ற தொழிற்சாலைகளை அமைத்து இங்குள்ள மனித வளத்தைப் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டால் அது பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத் தொழிலாக அமைந்து பயனளிக்கும்” என்றார்.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2733 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 1450 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆயுத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 3500 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் சமூக ஆளுகையை வலுவூட்டுவதற்கான அமுலாக்கத்திற்கு கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி பிரதேச சபைகள் தெரிவு செய்ய்பட்டுள்ளன. ஓக் ழுயம நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்டு ஜனதாக்ஸன் மற்றும் சர்வதேச கெயார் நிறுவனங்களினால் இத்திட்டம் அமுலாக்கம் செய்யப்படுகிறது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை குறிப்பாக இலகுவில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினரான பெண்கள் மற்றும் இலங்கையிலுள்ள இளையோர் சமுதாயத்தையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY