20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு குறைவான ரன்கள் எடுக்கும் ஆடுகளம் சிறந்த தேர்வாக இருக்காது: தோனி

0
137

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 83 ரன்னில் சுருண்டது. சர்பிராஸ் அகமது அதிக பட்சமாக 25 ரன் எடுத்தார். 2 பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்தனர். ஹர்த்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், நெக்ரா, பும்ரா, யுவராஜ் சிங் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்தது. வீராட் கோலி 51 பந்தில் 49 ரன் எடுத்தார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 8 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. 4–வது விக்கெட்டுக்கு கோலி–யுவராஜ்சிங் ஜோடி 68 ரன் எடுத்தது முக்கிய அம்சமாகும்.

இந்திய அணி பெற்ற 2–வது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி இருந்தது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:–

எங்களது ஆக்ரோஷமான ஆட்டம் வெற்றிக்கு உதவியாக இருந்தது. 83 ரன்னுக்குள் பாகிஸ்தானை கட்டுப்படுத்தியது பாராட்டுக்குறியது. வேகப்பந்து வீரர்கள் நேர்த்தியாக வீசினார்கள். விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றியதால் ஆட்டம் எங்கள் பக்கம் இருந்தது.

எங்களது பீல்டிங் சிறப்பாக இருந்தது. ஒரு ரன் அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடும்.

இந்த ஆட்டத்தில் மிகவும் குறைவான ரன்களே எடுக்கப்பட்டது. அந்த வகையில் ஆடுகளம் மோசமாக இருந்தது. குறைவான ரன்களே எடுக்க கூடிய இந்த ஆடுகளம் உலக கோப்பை போட்டிக்கு சிறந்த தேர்வாக இருக்காது.

80 முதல் 100 ரன் என்பது மிகவும் குறைவான ஸ்கோர். குறைவான ஸ்கோர் என்றால் 130 முதல் 140 ரன் வரை இருக்கலாம். அதிகபட்ச ஸ்கோர் என்பது 200 அல்லது 240 ரன் ஆகும். 20 ஓவர் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். சிக்சர், பவுண்டரிகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். இதனால்தான் அதிகமான ரன்களை குவிப்பதற்கு ஏற்ற ஆடுகளங்களை அமைக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் விளையாடிய ‘பிட்ச்’ மிகவும் நன்றாக இருந்தது. 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் அது இருந்தது. நல்ல பயிற்சியாகவும் இருந்தது.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

மேலும் மைதானத்தில் நடுவர்கள் காதில் மாட்டிக் கொண்டும் பேசும் கருவிகளுக்கு டோனி அதிருப்தி தெரிவித்தார். வங்காளதேச நடுவர் சைகத் பாகிஸ்தான் வீரர் குர்ரம் மசூர் பேட்டை தவற விட்டதை கவனிக்க தவறினார். இதனால் இந்த கருவிகளை பயன்படுத்துவதற்கு அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

LEAVE A REPLY