கிழக்கு பிரிந்த நிலையிலும் முஸ்லிம்களுக்கு தன்னாட்சி அதிகார அலகு அவசியம்; தேசிய முஸ்லிம் கவுன்சில்

0
144

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனியே பிரிந்திருந்தாலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் ஏகமனதான கோரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கவுன்சில் தலைவர் எம்.ஐ.எம்.வலீத், செயலாளர் நாயகம் எஸ்.எம்.ஏ.மௌலானா, தேசிய அமைப்பாளர் எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“முஸ்லிம்களின் அங்கீகாரமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுமானால் அது முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்படும் அடிமைச்சாசனமாகவே அமைந்து விடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதற்காக வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படாமல் இப்போது இருப்பது போன்று தனித்தனியாக இருந்தால் போதும் என்று முஸ்லிம் தரப்பில் சில கருத்தாடல்கள் முன்வைக்கப்படுவதானது ஆரோக்கியமான முன்மொழிவாக இருக்காது.

தமிழருக்கு ஏதாவது கொடுத்தால் எமக்கும் தாருங்கள், இல்லையேல் எமக்கு எதுவும் வேண்டாம் என்பது போல் முஸ்லிம் சமூக மட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்படுவதும் தமிழர் கோருவது போன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது எனக் கோஷமிடுவதும் முஸ்லிம்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடலாம்.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நல்லாட்சி அரசாங்கம், அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ள நல்ல சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பதை முஸ்லிம் தரப்பு தெளிவாக முன்வைக்க வேண்டிய தருணத்தில், இன்னொரு சிறுபான்மைச் சமூகம் முன்வைக்கின்ற கோரிக்கையுடன் முட்டி மோதிக் கொள்ளும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றி, ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருவதானது கவலைக்குரிய விடயமாகும்.

அதிகாரப் பகிர்வின்போது நமக்கான தீர்வு என்ன என்பதையே நாம் உரத்துச் சொல்ல வேண்டும். இன்னொரு சமூகத்தின் அபிலாஷைக்கு குறுக்கே நிற்பது போன்ற கோஷத்தை முஸ்லிம் தரப்பு எழுப்பத் தேவையில்லை. தமிழருக்கு தீர்வின்றேல் முஸ்லிம்களுக்கும் தீர்வு கிடையாது. அதேவேளை முஸ்லிம்களை அரவணைக்காத எந்தவொரு தீர்வுப் பொதியும் வெற்றியளிக்கப் போவதுமில்லை.

சர்வதேசத்தின் அனுசரனைப் பின்னணியுடன் தமிழ் சமூகம் மிகப்பெரும் பலத்துடன் காய் நகர்த்துகின்றபோது, முஸ்லிம் சமூகம் எவ்வித தெளிவும் இல்லாமல் ஊடக அறிக்கைகளுக்குள் மூழ்கி, அந்த சமூகத்தை சீண்டிப்பார்க்க முற்படுவது எந்தளவு அறிவுபூர்வமானது என்பதை முஸ்லிம் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்.

கிழக்கு கிழக்காகவே இருக்கட்டும்- அது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணமாகவும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகிப்பதற்கும் முஸ்லிம்களின் ஆட்சிக்குட்பட்டதாகவும் இருக்கும்போது ஏன் அந்த கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டும் என்ற கேள்வி முஸ்லிம் புத்திஜீவிகள் மட்டத்தில் எழுப்பப்படுகிறது.

கிழக்கை வடக்குடன் இணைப்பதென்பது முஸ்லிம்களுக்கு பாதகமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் கிழக்கு மாகாணமானது எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கும் என்பது தவறான சிந்தனையாகும்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டி ஆட்சியைக் கைப்பற்றியது போன்று கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டி ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அதற்கு இனி ஒருபோதும் வாய்ப்பும் இல்லை. இறுதியாக இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் கூட்டமைப்பு 14 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களை மாத்திரமே வென்றிருந்தது.

ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்ததன் பிரகாரம் அக்கட்சிக்கு மாகாண ஆட்சியில் இரண்டு அமைச்சுகள் வழங்கப்பட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத் எனும் முஸ்லிம், மஹிந்த ராஜபக்ஷவினால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி மைத்திரி, முஸ்லிம் காங்கிரசின் நசீர் அகமதுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கினார்.

தற்போதைய கிழக்கு மாகாண கூட்டாட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளும் பங்காளியாக இருப்பதுடன் அக்கட்சிகளுக்கும் அதிகாரப் பதவிகள் பங்கிடப்பட்டுள்ளன.

கிழக்கின் உண்மையான நிலைவரம் இவ்வாறிருக்க அந்த கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தன்னாட்சிக்குட்பட்டிருப்பது போன்ற மாயைக்குள் வீழ்ந்து, எமக்கு எதுவும் வேண்டாம்- கிழக்கு கிழக்காக இருந்தால் மட்டும் போதுமானது என்று திருப்தி கொள்வது எந்தளவுக்கு நியாயமானது.

ஆகையினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியே பிரிந்திருந்தாலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை ஒன்று அமைவதன் மூலமே முஸ்லிம்களுக்கான தன்னாட்சி அதிகாரம் உறுதி செய்யப்படும் என்பதில் முஸ்லிம் புத்திஜீவிகள் முதலில் தெளிவு பெற வேண்டும் என்பதுடன் அதனையே முஸ்லிம் சமூகத்தின் ஏகமனதான கோரிக்கையாக அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு முன்மொழியப்பட வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

இதனையே தேசிய முஸ்லிம் கவுன்சில் சமர்ப்பிக்கவுள்ள அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஆலோசனையில் முன்னிலைப்படுத்தியுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்லம் எஸ்.மௌலானா

LEAVE A REPLY