இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

0
143

ஆசியக்கிண்ண டி20 லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஆசியக்கிண்ண டி20 தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த அணிகள் கடைசியாக 2015ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் மோதியது.

இதன் பின்னர் இவ்விரு அணிகளுக்கு இடையேயான தொடர் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த இரு அணிகளின் மோதல் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா:-

இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் இருப்பது பலமாக உள்ளது. அதேபோல் கோஹ்லியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும், சகலதுறை வீரராக பாண்ட்யா பட்டையை கிளப்பி வருகிறார். காயத்தால் அவதிப்பட்டு வரும் அணித்தலைவர் டோனி இந்தப் போட்டியில் காயத்தை பொருட்படுத்தாமல் களமிறங்கலாம். அப்படி அவர் இடம்பெறவில்லை என்றால் பார்த்தீவ் படேல் களம் காண்பார்.

அதேபோல் அதிரடி வீரரான யுவராஜ் சிங் சிக்சர் மழை பொழிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பந்துவீச்சில் நெஹ்ரா அசத்தி வருகிறார். அவர் 36 வயதானலும் நேர்த்தியாக பந்துவீசி வருகிறார். பும்ராவும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொல்லை தரலாம். சுழலில் அசத்த ஜடேஜா, அஸ்வின் உள்ளனர்.

பாகிஸ்தான்:-

அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், மாலிக், உமர் அக்மல், அன்வர் அலி, இமாம் வாசிம் என டி20 போட்டிக்கு ஏற்ற பட்டாளமே உள்ளது. அப்ரிடியும் வானவேடிக்கை காட்டலாம்.

பந்துவீச்சில் முகமது சமி, முகமது இர்பான், வஹாப் ரியாஸ் என சிறந்த கூட்டணி உள்ளது.

மேலும், சூதாட்ட வழக்கில் சிக்கி 5 ஆண்டுகள் தடைபெற்ற முகமது ஆமிர் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு சிறந்த பலம் ஆகும்.

அதேவேளை ஊக்கமருத்து விவகாரத்தில் சிக்கிய யாசிர் ஷா இல்லாதது அந்த அணிக்கு இழப்பே.

பரம எதிரிகளான இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் வெற்றி பெற கடினமாக போராடும் என்பதால் இன்றையப் போட்டி அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும்.

LEAVE A REPLY