20 ஓவர் உலக கிண்ண தொடருடன் ஓய்வு பெறலாம்: மலிங்கா

0
67

இலங்கை கிரிக்கெட் அணியின் (20 ஓவர் போட்டி) தலைவர் மலிங்கா தான் விரைவில் ஓய்வு பெறலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்து முடிந்த ஆசியக்கிண்ண டி20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ), நடப்பு சாம்பியன் இலங்கையை போராடி வென்றது. இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மலிங்காவிடம், 20 ஓவர் உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “அதற்கான வாய்ப்பு உள்ளது. எனக்கு தற்போது 32 வயது ஆகிறது. தற்போது நான் மிக மோசமான காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். தற்போது உள்ள நிலையில் நான் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நான் ஓய்வே பெற்று விடலாம்.

நாட்டுக்கு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினால், என்னால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய முடியாது. எனவே, இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் விளையாடுவேன் என்று உறுதியாக கூறமுடியாது. நான் விளையாடப் போகும் இந்த கொஞ்ச காலத்தில் தேசிய அணிக்காவும், என்னுடைய ஐ.பி.எல். அணிக்காவும் சிறப்பாக விளையாட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை அணி ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்கக்காராவின் ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தடுமாறிவரும் நிலையில், மலிங்காவும் ஓய்வு பெறலாம் என்ற தகவல்  ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY