5 வயது ஆப்கான் சிறுவனுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை அனுப்பிய கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்சி

0
180

போரால் சிதிலமடைந்துள்ள ஆப்கானிஸ்தானில் இரண்டு விளையாட்டுக்கள் தான் பிரபலம். ஒன்று கிரிக்கெட், இன்னொன்று கால்பந்து.

காபூல் அருகில் இருக்கும் காஸ்னி மாகாணத்தை சேர்ந்தவன் 5 வயது ஏழை சிறுவன் மூர்த்தாசா அஹ்மதி. இவனுக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்சி என்றால் உயிர். இவனது 15 வயது சகோதரனும் கால்பந்து ரசிகன்.

மூர்த்தாசா அஹ்மதிக்கு அவனது சகோதரன் மளிகை பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை கால்பந்து ஜெர்சியை போல் மாற்றி அணிவித்துள்ளான். மேலும் பிளாஸ்டிக் பை மீது, ’மெஸ்சி 10’ என்று மார்கர் பேனாவால் எழுதியுள்ளான். இந்த ஜெர்சியை அணிந்திருக்கும் தம்பியை புகைப்படம் எடுத்து கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளான்.

விளையாட்டாக எடுக்கப்பட்ட இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் இருந்த கால்பந்து ரசிகர்களின் இதயங்களை நொறுங்கச் செய்யும் புகைப்படமாக மாறியது. அது மெஸ்ஸியையும் எட்டியது.

இந்நிலையில் 5 வயது சிறுவன் மூர்த்தாசா அஹ்மதிக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை அனுப்பியுள்ளார் கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்சி. மிக்க அன்புடன் மெஸ்சி என்று ஸ்பானிஷ்சில் எழுதி கையெழுத்திட்டுள்ளார். ஜெர்சியுடன் கால்பந்து உட்பட பல பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளார் மெஸ்சி.

ஆனால் சிறுவன் மூர்த்தாசா அஹ்மதியை மெஸ்சி சந்திக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY