20 ஓவர் உலக கிண்ணத்துடன் விலக திட்டம்: ஓய்வு குறித்து மறுபரிசீலனை – அப்ரிடி அறிவிப்பு

0
236

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சகித் அப்ரிடி. 35 வயதான அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ண போட்டியுடன் அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்வதாக அப்ரிடி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டனான அவர் இது குறித்து கூறியதாவது:–

20 ஓவர் உலக கிண்ணத்தோடு அனைத்து வகை சர்வதேச போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தேன். ஆனால் எனது குடும்பத்தினரின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை தொடர்ந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுமாறு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

எனவே அதுபற்றி யோசித்து வருகிறேன். இதனால் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை குறித்து மறுபரீசலனை செய்து வருகிறேன். ஓய்வு பெறுவதற்கு முன்பு எனது முடிவை தெரிவிப்பேன்.

ஆசிய கோப்பை போட்டியின் முடிவை எதிர்பார்க்கிறேன். அதை பொறுத்து 20 ஓவர் உலக கோப்பையில் இறுதி முடிவை எடுப்பேன். என்னை விட சிறந்த வீரர்கள் வரும் போது வெளியே செல்வதுதான் சிறந்தது. இவ்வாறு அப்ரிடி கூறியுள்ளார்.

அப்ரிடி அடுத்த வாரம் தனது 36–வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். 20 ஓவர் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் அவர் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 90 போட்டியில் விளையாடி 91 விக்கெட் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY