ஆப்கான் அகதிகளுக்கு எல்லையை மூடியது மசிடோனியா: ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி

0
136

ஆப்கான் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை மசிடோனியா தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரை ஒட்டிய வடக்கு எல்லையில் நிர்க்கதியாகியுள்ளனர்.

இவ்வாறு சிக்கித் தவிக்கும் 5,000 க்கும் அதிகமானோர் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லை வேலியை வலுக்கட்டாயமாக கடந்து செல்ல முயற்சித்துள்ளனர். மறுபுறம் மேலும் நான்காயிரத்திற்கும் அதிகமான தஞ்சம் கோரிகள் கடல் வழியாக கிரேக்கத்தை அடைந்துள்ளனர்.

மசிடோனிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஏனைய அரசுகள் போன்று சிரியா மற்றும் ஈராக்கியர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிராக கிரேக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சிரிய நாட்டவர்களுக்கு அடுத்து 2015இல் ஆப்கானியர்களே ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேர் தஞ்சம் கோரியுள்ளனர்.

முன்னதாக நாளொன்றுக்கு 80 தஞ்சக் கோரிக்கையாளர்களே தனது தெற்கு எல்லை ஊடாக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரியா அறிவித்து மூன்று தினங்களிலேயே மசிடோனியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனினும் ஆஸ்திரியாவின் இந்த கட்டுப்பாடு மனித உரிமை சாசனத்திற்கு எதிரானது என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கிரேக்கத்தில் இருந்து படையெடுக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த பல்கான் நாடுகள் தனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டில் கிரேக்கம் வழியாக ஐரோப்பாவை நோக்கி பாரிய எண்ணிக்கையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஐரோப்பாவை அடைந்தனர்.

இவ்வாறு ஜெர்மனி அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் அடைக்கலம் பெற எதிர்பார்த்தே தமது பயணத்தை தொடர்கின்றனர். 2015 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு மாத்திரம் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் வந்தடைந்தனர். இதில் கடந்த திங்கட்கிழமை 5000க்கும் அதிகமானோர் கிரேக்கத்தின் மசிடோனிய எல்லையில் ஒன்றுதிரண்டுள்ளனர்.

600 ஆப்கானியர் அளவில் ‘எல்லையை திற’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கிரேக்க பாதுகாப்பு வளையத்தை முறியடித்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லை வேலியை அடைந்தனர். இதன்போது பலரும் எல்லை வேலியை கடந்து செல்ல முயற்சித்து கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வொன்று கிட்டும் என்று கிரேக்க குடிவரவு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புதிய கட்டுப்பாடு நாட்டுக்குள் குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று கிரேக்கம் அச்சப்படுகிறது.

எனினும் கடந்த திங்கட்கிழமையும் 4,000க்கும் அதிகமான தஞ்சக்கோரிக்கையாளர்களை ஏற்றிய நான்கு கப்பல்கள் கிரேக்க துறைமுகத்தை அடைந்தன. இவ்வாறு வருபவர்கள் மசிடோனிய நாட்டு எல்லையை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY