பிரகீத் எக்னலிகொட பெல்ஜியத்தில் வாழ்கின்றமை ஊர்ஜிதம்

0
256

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான ப்ரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அரசாங்கத்தில் இராணுவத்தினருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறின் தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்ல தயங்கமாட்டேன் என்றும் அவர் சூளுரைத்தார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னலிகொட உண்மையில் ஓர் ஊடகவியலாளரா? அவர் எவ்வாறு ஊடகவியலாளர் ஆனார்? போன்ற பல சர்ச்சைகளும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்டிருந்தது.

இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொல்வதாக பிரகீத் எக்னலிகொட என்பவர் பிபிசி செய்திச் சேவைக்கு தகவல் வழங்கி இருந்தார். எமது இராணுவத்திற்கு சர்வதேசத்தில் அவப்பெயரை தேடித்தரும் வகையில் தவறான செய்தியை வழங்கியமைக்காக எனக்கு அவர் மீது தனிப்பட்ட கோபம் உண்டு. இருப்பினும் நான் அவரைக் கண்டது இல்லை. அவருடன் எனக்கு தொடர்பும் இல்லை.

என்றும் பிரதி அமைச்சர் அருந்திக்க நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற ஊடகவியலாளரான மஞ்சுள வெடிவர்தன எனது பாடசாலை நண்பராவார். பிரகீத்தை ப்ரசல்ஸ் நகரில் வைத்து கண்டதாக மஞ்சுள என்னிடம் தெரிவித்தார்.

எனது பாடசாலை நண்பன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் கூறியது உண்மை என்ற நிலைப்பாட்டிலேயே நான் இன்னமும் இருக்கிறேன். பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டதை பொறுத்துக்கொள்ள இயலாத நிலையிலேயே நான் இதனை பாராளுமன்றத்தில் கூறவேண்டி ஏற்பட்டது. பின்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திலும் நான் இதனைத் தெரிவித்தேன்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுவாக இருந்தாலும் விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்றும் அவர் கூறினார். “நானும் விமானப் படையில் இருந்திருக்கிறேன். எனது கண்ணில் ஏற்பட்ட ஒரு உபாதை காரணமாகவே நான் அதைவிட்டு வெளியேற நேர்ந்தது.

என்னுடன் இருந்த 04 விமானப் படை வீரர்கள் யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்கள். அந்த வலி எனக்குள் இன்னும் இருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்கவோ எவரையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவோ இடம் வழங்கமாட்டார் எனும் உறுதியான கொள்கையில் இருப்பதால் தான் நாம் அவருடன் இருக்கின்றோம். நாட்டையும் மக்களையும் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாத்த இராணுவ வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தில் அவ்வாறானதொரு நிலை ஏற்படாவிடின் நான் அரசாங்கத்தை விட்டு வெளியேற தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

-Thinakaran-

LEAVE A REPLY