சிரியாவில் பெப். 27இல் யுத்தநிறுத்தம்

0
166

சிரியாவில் வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி நள்ளிரவுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை அமுலுக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா அறிவித்துள்ளன.

எனினும் இந்த யுத்த நிறுத்தத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு மற்றும் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உள்ளடக்கப்படவில்லை என்று இரு நாடுகளும் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் ஒரு வாரத்திற்குள் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர உலக வல்லரசு நாடுகள் கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி இணக்கத்திற்கு வந்தன. எனினும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையிலும் யுத்த நிறுத்தம் குறித்த எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

யுத்த நிறுத்தத்திற்கான முயற்சிகள் தீவிரமாக இருந்த சூழலிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டமஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகரங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் 140 பேர் கொல்லப்பட்டதோடு ஏனைய பகுதிகளிலும் வன்முறை நிடித்து வருகிறது.

கடந்த 2011 மார்ச் மாதம் ஆரம்பமான சிரிய மோதல்களில் இதுவரை 250,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1.1 மில்லியன் பேர் வரை வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு மில்லியன் பேர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களில் கணிசமானவர்கள் உயிராபத்துக் கொண்ட ஐரோப்பாவிற்கான பயணத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்த சிரிய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு சிரிய பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றதோடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

அஸாத் தயார்

வெள்ளை மாளிகை விடுத்திருக்கும் அறிவிப்பில், ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் அழைத்து உரையாடியபோதே, யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு புட்டின் அழைப்பு விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி ஊடான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளன. இந்த யுத்த நிறுத்தத்தை அமுலுக்கு கொண்டுவர, “சிரிய மோதலின் தரப்புகள் தமது ஒத்துழைப்பை வெளிப்படுத்தி நிபந்தனைகளை ஏற்க வேண்டும்” என்று அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நாவினால் அடையாளப்படுத்தப்பட்ட ஐ.எஸ்., நுஸ்ரா மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகள் இந்த யுத்த நிறுத்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த தீவரவாத குழுக்களுக்கு எதிராக சிரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் அரச எதிர்ப்பு குழுக்கள் தமது பங்களிப்பு குறித்து வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி மதியத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சிரிய அரசின் விமானங்கள் அரச எதிர்ப்பு போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இதில் யுத்த நிறுத்தத்தை ஏற்கும் குழுக்களின் ஆட்புல எல்லைகளை வரையறுக்க அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து செயற்படவுள்ளன.

இந்த உடன்பாட்டின்படி அவரச தொலைபேசி வலையமைப்பு நிறுவப்படவுள்ளது. இதன்மூலம் யுத்த நிறுத்த மீறலை கண்காணிக்க வசதிகள் ஏற்படுகின்றன.

சிரிய அரச எதிர்ப்பு குழுக்களின், உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழு, இந்த உடன்பாட்டை ஏற்பதாக அறிவித்துள்ளது. எனினும் தாம் இந்த யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்க முற்றுகையை அகற்றுவது, சிவிலியன்களை தாக்குவதை நிறுத்துவது, கைதிகளை விடுவிப்பது மற்றும் உதவிகளை விநியோகிப்பது ஆகிய நிபந்தனைகள் பூர்த்தியாவதிலேயே இருக்கிறது என்று எச்சரித்துள்ளது.

இந்த உடன்பாட்டை வரவேற்றிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி, “இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வருவதென்பது வன்முறைகள் குறைவதாக மாத்திரம் இருக்காது. அது முற்றுகை பகுதிகளுக்கான அவசர உதவிகளை வழங்குவதாகவும் அமையும்” என்றார்.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா எதிர் எதிர் தரப்புகளுக்கு அதரவளித்து வருகின்றன. ரஷ்யா சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் நெருங்கிய நாட்பு நாடாக உள்ளது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கு நிபந்தனை விதித்திருந்தார். அதில் தீவிரவாதிகள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் அதனை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்ய வான் தாக்குதலின் உதவியோடு அரச படை வடக்கு நகரான அலெப்போவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளில் முன்னேறி வருகிறது. இந்த தீவிர மோதல் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக ஏற்கனவே யுத்த நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கேடு தோல்வி அடைந்தது.

சிரியாவில் வான் தாக்குதல்கள் தொடர்கின்றன. மறுபுறம் குர்திஷ் படைகளின் நிலை குறித்தும் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. வடக்கில் முன்னேறும் குர்திஷ் படையினர் மீது துருக்கி இராணுவம் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தரப்புகளை யுத்த நிறுத்தத்திற்கு இணங்கச் செய்வதிலும் இழுபறி உள்ளது.

எவ்வாறாயினும் கடந்த திங்கள் பின்னேரத்திலும் எந்த தொய்வும் இன்றி சிரியாவில் மோதல்கள் மற்றும் வான் தாக்குதல்கள் நீடித்து வருவதாக சிரிய உள்நாட்டு யுத்தத்தை கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பு விபரித்துள்ளது. டமஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களுக்கு இடைப்பட்ட இராணுவத்தின் பிரதான விநியோகப் பாதை மீது ஐ.எஸ். போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹோம்ஸ் மற்றும் டமஸ்கஸ் நகரங்களில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஐ.எஸ். குழு பொறுப்பேற்றது.

அரசியல் தீர்வொன்றை எட்டுவதை தடுக்கவே இந்த நாச வேலைகள் இடம்பெறுவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ். தோல்விக்கு முகம் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக அந்த குழுவுக்கு எதிராக போராடும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் பேச்சாளர் கேர்ணல் ஸ்டீவ் வொரன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY