தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 1.1 சதவீதத்தினால் வீழ்ச்சி!

0
130

இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கான தேசிய நுகர்வோன் விலைச்சுட்டெண் கடந்த மாதச் சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 1.1 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது என தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே.சத்தரசிங்ஹ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு்ளளதாவது, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான தேசிய நுகர்வோன் விலைச்சுட்டெண் 112.0 என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத நுகர்வோன் விலைச்சுட்டெண் பெறுமதியானது 113.2 ஆக மதிப்படப்பட்டது. எனவே கடந்த மாதத்துடன் ஜனவரி மாதச் சுட்டெண்ணை ஒப்பிட்டு நோக்கும் போது 1.1 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இது உணவுப் பொருட்களின் 1.03 சதவீத மற்றும் உணவல்லா பொருட்களின் 0.02 சதவீத வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டதொன்றாகும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மரக்கறி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தேசிக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய், அரிசி, சின்ன வெங்காயம், பால் மா, என்பவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே உணவுப் பொருட்களின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாகும்.

எனினும் மீன், கருவாடு, சீனி, முட்டை, மைசூர் பருப்பு, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் எண்ணெய், மிளகாய்த்தூள், என்பவற்றின் விலைகளில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2016 ஜனவரி மாதத்துக்கான உணவல்லா பொருட்களின் பெறுமதி 0.02 சதவீத வீழ்ச்சியினை காட்டுகின்றது. இதற்கான பிரதான காரணமாக போக்குவரத்து கொள்ளப்படுகின்றது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது விமானக் கட்டணத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக போக்குவரத்து பிரிவில் வீழ்ச்சி ஏற்பட்டது. அற்ககோல் பானங்கள், புகையிலை, மற்றும் போதைவஸ்து மற்றும் உடையும் காலணியும் பிரிவில் சிறிதளவு அதிகரிப்புக் காணப்படுகிறது எனவும் அவ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

LEAVE A REPLY