“நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலானது இனவாத சக்திகள் மீண்டும் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்து விடக்கூடாது” அப்துர் ரஹ்மான்

0
198

“நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலானது தோற்கடிக்கப்பட்ட இனவாத சக்திகள் மீண்டும் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்து விடக்கூடாது” என NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். கட்டாரில் நடை பெற்ற ஒன்றுகூடல் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) அங்கத்தவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 21.02.2016 அன்று கட்டாரில் நடை பெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தையும், ஏனைய பிரதேசங்களையும் சேர்ந்த கட்டார் வாழ் NFGG யின் அங்கத்தவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
“பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்ப்படும் தேர்தலாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளன. புதிய மக்கள் ஆணையின் மூலமாக புதிய ஜனாதிபதியும், புதிய அரசாங்கமும் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகமும் மக்களினால் தெரிவு செய்யப்படும் புதிய பிரதிநதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆட்சி மாற்றத்தின் மற்றுமொரு அடிமட்ட நிலை ஆட்சிமாற்றமாக இது அமையும்.

அத்தோடு புதிய அரசாங்கத்தினது புதிய அபிவிருத்திக் கொள்கைகளுக்கேற்ப வினைத்திறனுடன் அபிவிருத்திகளை மேற் கொள்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய உள்ளுராட்சி மன்றங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

அதேவேளை கடந்த ஆண்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான குழுவினரும் அவர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாத சக்திகளும் தற்போதைய அரசாங்கத்தை புரட்டுவதற்கான எல்லா சதி முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக அரசியலமைப்பு மாற்ற விடயம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வினைக் கொண்டு வந்து நாட்டு மக்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய பாதையில் இந்த நாட்டைக் கொண்டு செல்ல வேண்டியது தலையாய கடமையாக மாறியிருக்கிறது.

இந்த முயற்சிகளுக்கு இனவாத மற்றும் பிரிவினைவாத சாயம்பூசி இதனைத் தோற்கடிப்பதற்கான சதி முயற்சிகளை மஹிந்த தலைமையிலான குழுவினர் ஏற்கனவே பரவலாகத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக்களமானது இவர்களது தீய இனவாத கருத்துக்களை அப்பாவிப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைப்பதற்கான சந்தர்ப்பமாக அமையலாம். அத்தோடு, இந்த அரசாங்கத்திற்கு எதிராக இனவாத சக்திகளை ஒன்று திரட்டுவதற்கான நல்ல களமாகவும் தேர்தல் களம் அமைந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது.

எனவேதான் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலானது தோற்கடிக்கப்பட்ட இனவாத சக்திகள் மீண்டும் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்து விடக்கூடாது என்பதில் , இந்நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் புதிய அரசியலமைப்புருவாக்க நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படுகின்ற வரை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதானது இந்நாட்டின் பொது நன்மைக்கு உகந்ததாகவே தெரிகிறது.”

இக்கலந்துரையாடலில் NFGG a யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியாலாளர் பழ்லுல் ஹக் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY