சித்திரை புதுவருடத்துக்குள் சகலருக்கும் மின்சாரம்: அஜித் பி பெரேரா

0
158

நாடளாவிய ரீதியில் மின்சார வசதிகள் இன்றி உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் சித்திரைப் புதுவருடத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின்வழங்கல் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றுகையில், மின்சார வசதியின்றியுள்ள சகல கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை எமது அமைச்சினூடாக இலங்கை மின்சாரசபை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 2,080 பேர் கிராம மட்டத்தில் உள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். தற்போது முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தில் பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்படிவங்களை வழங்கப்பட்டு, விண்ணப்பப்படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக மின் இணைப்பு இல்லாதவர்கள் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து கிராம அலுவலர்களிடம் கையளிக்க வேண்டும்.

இதன் பின்னர் அந்த விண்ணப்பப் படிவங்களை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து பிரதேச மின் பொறியியலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் இணைந்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளாயினும் தற்காலிக வீடுகளாயினும் சரி சகல வீடுகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

இதன் பின் நாட்டில் சகல வீடுகளும் மின்சாரம் இல்லாத வீடுகளாக மாற்றப்படும். நாங்கள் கிராமத்துக்கு மட்டும் மின்சாரத்தினை வழங்கிவிட்டு மின்சாரம் வழங்கிவிட்டோம் என்று கூறிவந்தோம். ஆனால் அந்த மின்சாரம் வீட்டுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அதனை இன்று நாங்கள் செய்வதற்கு முன்வந்துள்ளோம். இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இன்று வறிய மக்கள் பலர் மின்சாரம் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்களும் அந்த மின்சாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளோம்.

வீட்டுக்கு வயரிங் செய்வதில் இருந்து அவர்கள் மின்சாரத்தினைப் பெற்றுக் கொள்வது வரையிலான செலவுகளை அரசாங்கம் வழங்கும். வீட்டுக்கு மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு செலவு செய்யப்படும் பணத்தினை ஆறு வருடங்களில் மாதாந்தம் 680 ரூபா வீதம் குறைந்த தொகையினை மின்சார பட்டியலுடன் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம்.

ஒரு வீட்டுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து செலவினமாக சுமார் மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா தேவைப்படுகின்றது. அதற்கான நிதியை நாங்கள் கொண்டுள்ளோம். அதனை விரைவாக செயற்படுத்த அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம். மின்சாரங்களை வழங்கும் போது சட்டரீதியான காணி, சட்ட ரீதியற்ற காணியென்று பார்க்கத் தேவையில்லை. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படவேண்டும்.

அரச காணிகளில் 10 வருடங்களுக்கு மேல் குடியிருப்போருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மூலம் இதுவரையில் இலங்கையில் 115000 பேருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது என மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் தெரிவித்தார் .

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், மின்சாரப் பொறியியலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

LEAVE A REPLY