ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று பங்களாதேஷில் ஆரம்பம்

0
239

பங்களாதேஷில் இன்று புதன்கிழமை புதுப் பொலிவுடன் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

டாக்காவில் நடைபெறவுள்ள இந்த முதலாவது போட்டியில் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி பங்கேற்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை காலமும் 50 ஓவர் போட்டித் தொடராக நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரானது இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெறுவது அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடருக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தகுதிச்சுற்று போட்டிகள் அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சிய அணி தொடரின் ஐந்தாவது அணியாக தெரிவாகியுள்ளது.இதன் பிரகாரம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி மிர்பூரில் நடைபெறவுள்ளது.

1984 ஆம் ஆண்டு ஆரம்பித்து இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் ஐந்து தடவை இந்தியாவும் ஐந்து தடவை இலங்கையும் இரு தடவை பாகிஸ்தானும் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன.

எனினும் 2014 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற தொடரில் இலங்கை சம்பியன் கிண்ணத்தை வென்றது. எனவே இந்த வருடமும் தான் பெற்ற சம்பியன் கிண்ணத்தை இலங்கை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் பேட்டி 20 க்கு 20 போட்டியாகநடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் 20க்கு 20 உலக கிண்ண போட்டிக்கு பயிற்சியாக இந்த தொடர் அமையும் என்று விளையாட்டு விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(Thinakaran)

LEAVE A REPLY