ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

0
190

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இதய துடிப்பு பதிவு தொழில் நுட்பவியலாளர் (ECG) ச.கிருஸ்ணகுமார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், தாக்கியவர் இரு நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை கைது செய்யப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம் பெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த வைத்தியசாலை அலகில் இடம்பெற்ற கடமை ஒதுக்கீடு சம்பந்தமாக தாக்குதலுக்குள்ளானவருக்கும், அதே அலகில் பணிபுரியும் இன்னொரு பெண் உத்தியோகத்தருக்குமிடையே எழுந்த பிரச்சினை தொடர்பாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்கலாமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினை குறித்து பொது இணக்கப்பாட்டிற்கு வந்த போதே, இத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

அது ஒரு அவசியமற்ற, கண்மூடித்தனமான, நாகரீகமற்ற. சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தாக்குதல் என அவர் கூறியுள்ளார்.

சம்பவ தினத்தில் இருந்து அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவர், முகத்தில் தாக்கப்பட்டதால் தலையின் உட்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் தனது 3 பிள்ளைகளும், மனைவியும் உளப் பாதிப்பிற்குள்ளாகியதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நல்லாட்சி நிலவுகின்ற காலத்தில், ஆதார வைத்தியசாலையில் கண்காணிப்பு கமராக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் இருக்கும் போது, தாக்கியவர் ஒரு அரச உத்தியோகத்தராக இருந்த போதும் நடைபெற்ற இத் துர்ப்பாக்கிய சம்பவம் தொடர்பாக தமக்கு துரிதமாக நீதி கிடைக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-IM-

LEAVE A REPLY