டி20 தொடரிலும் ஆதிக்கம்: இலங்கையை வென்றது இந்தியா

0
145

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 34 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடரின் முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் 36 ஓட்டங்களும், மந்தனா 35 ஓட்டங்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்களும் ஓரளவு ஓட்டங்கள் குவிக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சுரங்கிகா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும், எக்தா பிஷ்ட், பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY