அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 100 மில். டொலர் கடன் உதவி

0
97

சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு நீண்டகாலக் கடனுதவியாக பெற்றுக்கொடுக்கவுள்ளது.

இது தொடர்பில் பத்து உடன்படிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளன.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகாவோ நேற்று (22) இரவு இலங்கை வந்துள்ளார்.

இன்று காலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையிலான அரச மற்றும் தனியார் துறையின் முன்னணி 10 வங்கிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவினரை அவர் சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பு காலை 10 மணிக்கு கொழும்பு காலிமுக ஹோட்டலில் இடம்பெறும். இதன்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகளுக்கிடையில் வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவுள்ளது. அதனையடுத்து இலங்கை முன்னணி 10 வங்கிகளுடனான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படும்.

இந்த உடன்படிக்கையூடாக ஆசிய அபிவிருத்தி வங்கி மிகக் குறைந்த வட்டி அடிப்படையில் 30 வருடங்களில் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குகின்றது. இக்கடன்களை நாட்டில் பல பகுதிகளிலுமுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஆசிய அரச வங்கிகளும் செலான் வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி, கொமர்ஷியல் வங்கி, சம்பத் வங்கி, யூனியன் வங்கி, பான் ஏஷியா வங்கி, டி. எப். சி. சி. வங்கி ஆகிய தனியார் வங்கிகளுமாக 10 வங்கிகள் தனித்தனியே பத்து உடன்படிக்கைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து கைச்சாத்திடவுள்ளன.

நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள தொழில் முயற்சியாளர்களை இனம்கண்டு தகுதி அடிப்படையில் இந்த நிதி உதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிதியமைச்சருடன் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கையின் வதிவிட அமைச்சின் அபிவிருத்தி மற்றும் நிதி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஏ. எம். பீ. எம். பீ. அதபத்து உட்பட உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

LEAVE A REPLY