விட்டுக்கொடுக்கின்ற, மற்ற இனங்களை நேசிக்கின்ற மனநிலை எங்களுக்குள் இல்லை. எங்கள் தலைமைத்துவங்களுக்குள்ளும் இருக்கவில்லை: வியாழேந்திரன் எம்.பி

0
158

விட்டுக்கொடுக்கின்ற, மற்ற இனங்களை நேசிக்கின்ற மனநிலை எங்களுக்குள் இல்லை. எங்கள் தலைமைத்துவங்களுக்குள்ளும் இருக்கவில்லை இதுதான் நாங்கள் கடந்த கால அனுபவத்தில் பெற்றுக்கொண்ட படிப்பினை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான பற்றில் ஒப் பற்றி கிரிக்கம் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாடு இரண்டு மொழிபேசும் மூன்று இனம் வாழும் இரண்டு கோடி மக்களைக் கொண்ட சிறுநாடு.இந்த நாடு பிரித்தானிய காலணித்துவத்தில் இருந்து விடுதலைபெற்றதன் பின்னர் இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்துவந்த சிங்கள தலைமைத்துவங்கள் சிறுபான்மை மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்க தவறியது.

1970களில் பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டு தமிழ் இளைஞர் யுவதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். அடுத்தடுத்து வந்த சிங்கள தலைமைகள் சிறுபான்மை மக்களை நேசிக்க தவறியதுடன் அவர்களின் உரிமைகளையும் வழங்க மறுத்துவந்தனர்.

இதன் காரணமாகவே சாத்வீக வழியில் போராடிய தமிழர்கள் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்தது. இந்த ஆயுத போராட்டம் மூன்று தசாப்தமாக இந்த மண்ணில் நடைபெற்றது. 2009ஆம்ஆண்டு இந்த நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 10 இலட்சத்துக்கும் அதிமானோர் புலம்பெயர்ந்துசென்றுள்ளனர்.

இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக முடக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இந்த மண்ணில் இழந்துள்ளோம்.

விட்டுக்கொடுக்கின்ற, மற்ற இனங்களை நேசிக்கின்ற மனநிலை எங்களுக்குள் இல்லை. எங்கள் தலைமைத்துவங்களுக்குள்ளும் இருக்கவில்லை. இதுதான் நாங்கள் கடந்த கால அனுபவத்தில் பெற்றுக்கொண்ட படிப்பினை.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மகிந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு சிறந்த தீர்வுத்திட்டத்தினை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அதனைச்செய்ய தவறியது.

யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் கடந்த பின்னரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் காணாமல்போயுள்ளனர். உலகில் காணாமல் செய்யப்பட்டவர்கள் அதிகமாகவுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை உள்ளது.

அதேபோன்று பல இளைஞர், யுவதிகள் அரசியல் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் தற்போது உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றது. சிறுபான்மை சமூகத்தினை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மை மக்களில் இனவாத நோக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சிசெய்யலாம் என மகிந்த ராஜபக்ஸ கனவு கண்டார்.

ஆனால் 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி அவரது கனவு பலிக்கவில்லை. சிறுபான்மை மக்கள் ஆட்சிமாற்றத்தினை நோக்காககொண்டு மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடமேற்றினர்.

இந்த நல்லாட்சி என்னும் அரசாங்கம் ஒரு வருடத்தினை பூர்த்திசெய்துள்ள நிலையில் தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.

அது பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை கருத்தில்கொண்டு சிறந்த தீர்வுத்திட்டத்தினை அரசாங்கம் வழங்கவேண்டும்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடகிழக்கு பிரதேசத்தில் சிறந்த சமஸ்டி கட்டமைப்பினை இந்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தி தரவேண்டும். இந்த நல்லாட்சியில் கடந்த காலத்தில் இழந்த உரிமைகளை சிறுபான்மை சமூகம் அனுபவிக்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கையினை இந்த அரசாங்கம் வீணடிக்க கூடாது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸ ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து, இனவாதத்தினை தூண்டி இந்த நாட்டில் நடைபெற்றுவரும் நல்லாட்சியை குழப்பி தாங்கள் அரசியல் செய்யலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகள் இந்த நாட்டில் இல்லாமல் செய்யப்பட வேண்டும். தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம் பூர்த்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை விரைந்து பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY