சாதனைகளுடன் விடைபெற்றார் பிரன்டன் மெக்கல்லம்

0
145

நியூசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 145 ஓட்டங்கள் குவித்த மெக்கல்லம், 54 பந்தில் அதிவேகமாக சதம் விளாசி வரலாறு படைத்தார்.

இந்நிலையில் 2வது இன்னிசிலும் அதிரடியை தொடர்ந்த மெக்கல்லம் 3 பவுண்டரி, 1 சிக்சர் என 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இந்த டெஸ்டில் அவர் மொத்தமாக 170 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். கடைசி டெஸ்ட் போட்டியில் தலைவராக ஒருவர் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இதற்கு முன் கடந்த 1930ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கார்ல் நுனெஸ், இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி டெஸ்டில் 158 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

மேலும், கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் தலைவர் என்ற பெருமையையும் மெக்கல்லம் பெற்றார்.

34 வயதான மெக்கல்லம் 101 டெஸ்டில் விளையாடி 6,453 ஓட்டங்களும் (12 சதம், 31 அரைசதம்), 260 ஒருநாள் போட்டியில் 6,083 ஓட்டங்களும் (5 சதம், 32 அரைசதம்) எடுத்துள்ளார்.

அதேபோல் 71 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதம், 13 அரை சதத்துடன் 2,140 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வரும் 2வது டெஸ்டில் நியூசிலாந்து 201 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக கொடுத்துள்ளது.

LEAVE A REPLY