முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு ஒன்று உருவாக வேண்டும்: பசீர் சேகுதாவூத்

0
160

இலங்கையின் புதிய அரசியலமைப்பு மூலம் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு ஒன்று உருவாக வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார்.

´முஸ்லிம்களுக்கான தனியலகு´ பற்றி பேசாமல் அரசியல் தீர்வுத் திட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்ற அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறினார்.

இந்த அரசியல் கோரிக்கையை கட்சியின் அரசியல் அதியுயர் பீடத்துக்கு கொண்டுசெல்வதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே தான் இப்போது இதனை முன்வைத்துள்ளதாகவும் பசீர் சேகுதாவூத் கூறினார்.

இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக, நிலத்தொடர்பற்ற விதத்தில் முஸ்லிம்களின் தனியலகு அமைய வேண்டும் என்ற தங்களின் அரசியல் கோரிக்கையை மறக்கடிக்கச் செய்வது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற நோக்கத்தை சிதைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

´தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தொடர்ச்சியாக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையை சொல்கிறதோ- அதேபோல நாங்களும் அந்தக் கோரிக்கையை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்´ என்றார் பசீர் சேகுதாவூத்.

-BBC-

LEAVE A REPLY