ஈரானிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது

0
182

ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதன் காரணமாக, எண்ணெய் இறக்குமதிக்கு புத்துயிர் அளிக்கும் முகமாக, ஈரானிலிருந்து நேரடியாக எண்ணெய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய எரிவாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஈரானின் பொருளாதாரத்துக்கு அமெரிக்கா தடை விதித்திருந்ததன் காரணமாக, ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை, இலங்கை இடைநிறுத்தியிருந்தது. எனினும், ஈரான் மீதான பொருளாதார தடை தற்போது நீக்கப்பட்டுள்ளமையினாலயே, மீண்டும் அங்கிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு, அடுத்த மாதம் ஈரானுக்குச் செல்லவுள்ளதாக, அமைச்சர், தமிழ்மிரருக்கு தெரிவித்தார். இலங்கைக்கான எண்ணெய் இறக்குமதி தொடர்பாக ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடவுள்ளதாக, அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவிலிருந்து தான் இலங்கைக்கு திரும்பியவுடன், தான் ஈரான் நாட்டுக்குச் செல்லவுள்ளதாகவும் இது இடைநிறுத்தப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது தொடர்பில் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘அமெரிக்காவால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நாம் இடைநிறுத்தியிருந்தோம். இதன்பின்னர், இறக்குமதியின் போது இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த கடன் காரணமாகவும் அமெரிக்க டொலர் மூலமான பணப்பரிமாற்றம் காரணமாகவும் இலங்கை அரசாங்கம் சாத்தியமற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது.

இதன்பின்னர், சவூதி அரேபியாவின் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்தது’ என்று அவர் இதன்போது குறிப்பிட்டார். ‘ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையானது, இலங்கையின் தேயிலை ஏற்றுமதிகளையும் பாதித்தது. ஈரானானது, இலங்கையிலிருந்து சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது’என அவர் மேலும் கூறினார்.

-TM-

LEAVE A REPLY