இன ஒற்றுமையை இன்னும் இறுக்கமாக ஏற்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் ஓரணியில் இணைய வேண்டும்: ஷிப்லி பாறூக்

0
262

இன ஒற்றுமையை இன்னும் இறுக்கமாக ஏற்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் ஓரணியில் இணைய வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான சேவைகளினூடாக மனித நேயப் பணி [Serving Humanity through Empowerment and Development-SHED] அமைப்பின் 5 வது வருட நிறைவையொட்டி 2016.02.19ஆந்திகதி ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட கண்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,
பல்லின சமூகங்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறுபபான்மையினராக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூக இளைஞர் யுவதிகள் விளையாட்டுத் துறையிலும் முன்னேறக் கூடிய கால கட்டமாகவும் இது அமைந்துள்ளது.

சிறுபான்மை சமூகங்களின் இளையோரும் தேசிய ரீதியில் விளையாட்டில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் ஆயுதப் போராட்ட காலத்தில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வுகளை மறந்து ஒற்றுமைப்பட்டு இளஞ் சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கவலையான விடயம் என்னவென்றால் சிறுபான்மை இனங்களில் சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் விளையாடுவதற்கு மட்டுமன்றி வாழ்வதற்குக் கூட ஒரு துண்டுக் காணியில்லாமல் காலங்கழிக்க வேண்டியுள்ளது.

ஆயுத வன்முறைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் தமது ஆயிரக் கணக்கான ஏக்கர் பூர்வீகக் காணிகளை கைவிட்டே உயிருக்கு அஞ்சி நகரப் பகுதிகளுக்கு ஓடி வந்தார்கள்.

இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஒட்டு மொத்த நிலப்பரப்பு சுமார் 20 சதுர கிலோமீற்றர்கள் மாத்திரம்தான். ஆனால், மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 1000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பரந்த பிரதேசமாகும்.

எனவே, வாழ்வதற்கு ஒரு துண்டு நிலம் இல்லாமல் சன அடர்த்தியால் அவதியுறும் காணியற்ற முஸ்லிம்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச காணிகள் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது இனங்களுக்கிடையிலான சகவாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் நீடித்த சமாதானத்திற்கும் வழிவகுக்கும் என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக காணிப்பதிவாளர் ஏ. சக்கரிய்யா, செட் அமைப்பின் தலைவர் கே. அப்துல் வாஜித் உட்பட அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் செட் அமைப்பிற்கு அதன் தலைவர் கே. அப்துல் வாஜித்திடம் ஒலிபரப்பு சாதனங்களும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY