சிறந்த ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு தொழிற்சங்கங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: எம்.எஸ் சுபையிர்

0
211

(றியாஸ் ஆதம்)
எமது நாட்டில் சிறந்த ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு தொழிற்சங்கங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு அதன் பிரதித் தலைவர் எம்.ஐ லாபீர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஊழியர் சங்கங்கள் நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு ஆதரவாகவும் அதேபோன்று சர்வதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்ற சக்தியாகவும் திகழ வேண்டும் குறிப்பாக தொழிற்சங்கங்கள் எமது நாட்டினுடைய ஜனநாயகத்தன்மைக்கு பாரிய பங்களிப்பு செய்வதனையும் அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

கடந்தகாலங்களில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்ட அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் வீட்டுக்கு அனுப்புதற்கும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துமளவிற்கும் தொழிற்சங்கங்கள் சக்திபெற்று காணப்பட்டது.

அந்தவகையில் இலங்கை போக்குவரத்துச் சபையானது 1958ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முன்னால் பிரதமர் எஸ்.டபள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் தேசிய மயமாக்கப்பட்டு சுமார் 58 ஆண்டு காலமாக ஐந்து தலைமுறை மக்களுக்கு மக்கள் பங்காளியாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றது.

அத்துடன் தனியார் ஆதிக்கத்திலிருந்த போக்குவரத்து சேவையை அரசுடமையாக்கி இலங்கை போக்குவரத்து சபையாக மாற்றியமை ஒரு முக்கிய நிகழ்வாகும். அதேபோன்றுதான் 1978ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபை பன்முகப்படுத்தப்பட்டு பிராந்திய போக்குவரத்து சபைகளாகவும் மாற்றப்பட்டது. இது இரண்டாவது முக்கிய நிகழ்வாகும்.

இதேபோன்றுதான் கடந்த அரசாங்கங்களிலும் போக்குவரத்து சபை பல மாற்றங்களையும் தனதாக்கிக்கொண்டது. ஆகவே இத்தொழிற் சங்கத்தினுடைய புதிய பிரதித் தலைவராக கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து ஏறாவூரைச் சேர்ந்த எம்.ஐ லாபீர் தெரிவு செய்யப்பட்டிருப்பது எமது மாகாணத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

குறிப்பாக எனது தந்தையும் இலங்கை போக்குவரத்துச் சபையினுடைய ஒரு சாரதியாக பல வருடங்கள் பணியாற்றியவர். அதனாலே போக்குவரத்துச் சபையினுடைய ஊழியர் ஒருவர் ஆற்றுகின்ற பணிகளையும் அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களையும் நான் நன்கறிவேன்.

எனவே இச்சங்கத்தினுடைய ஊழியர்கள் தங்களது தொழிலை ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்வதுடன் சங்கத்தினுடைய நிருவாகத்திற்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் அப்போதுதான் நீங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சிணைகளுக்கும் சவால்களுக்கும் நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY