பாலத்துறை மக்களுக்கு உடன் மாற்று இருப்பிடங்களை வழங்குக: ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை

0
165

கொழும்பு வடக்கு பாலத்துறையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று இருப்பிடங்களை வழங்க வேண்டுமென முன்னாள் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலத்துறை மாதம்பிடிய கஜுமா தோட்ட மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் அந்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மட்டக்குளியில் வாழ்ந்த ஏழை மக்களை பலவந்தமாக வெளியே இழுத்துத் தள்ளி பெகோ இயந்திரம் மூலமாக அவர்களுடைய வீடுகளை, வதிவிடங்களை எல்லாம் உடைத்தெறிந்த இந்த அரசாங்கத்தின் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சென்ற தேர்தலின்போது அவர்களுடைய வாக்குகளை எல்லாம் அள்ளி எடுத்தவர், தற்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்க, மட்டக்குளியில் அந்த வாக்காளர்களுடைய வீடுகளை நொருக்கும் பொழுது அவர் தற்பொழுது ஜேர்மனியில் இருக்கிறார்.

ஆனால் நல்லாட்சி என்ற பெயரில் வந்த இந்த அரசாங்கம் பொல்லாட்சியை இவ்வளவு சீக்கிரமாக நடத்தும் என்று நாட்டில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, இந்தப் பின்னணியில் முஸ்லிம்களது ஆதரவு மஹிந்தவுக்கு பெருகி வருகிறது.

இன்று மல்வானை முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்காக வரவேற்புக் கூட்டத்தை நடத்துகின்றார்கள். காலையிலே பாடசாலைச் செல்லும் பிள்ளைகள் புத்தகப் பையுடன் திரும்பி தனது வீட்டுக்கு வரும்போது தங்களது வீடுகளை உடைத்துத் தள்ளி இப்படி ஈவிரக்கமற்ற செயலைச் செய்தமையானது, இந்த உலகத்துக்கு இந்த அரசாங்கத்தைப் பற்றி பறைசாட்டி இருக்கின்றது.

சென்ற அரசாங்கம் இப்படிப் பெரிய வீடுகளை உடைப்பதற்கு முன் அவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது. அது மட்டுமல்லாது, அதற்குரிய அத்தனை வேலைகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த வீட்டுத் திட்டம் தற்போது அரசாங்கம் மாறியதன் காரணமாக வேலைகள் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் அவ்வேலைகளைத் தொடர்ந்து செய்து தருவதாக டாடா கம்பனி அறிவித்துள்ளது என்றார்.

எம்.எஸ்.எம்.சாஹிர்-

LEAVE A REPLY