மத்திய ஆப்பிரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் பிரதமர் டோவாடெரா வெற்றி

0
54

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஃபாஸ்டின் அர்ச்சாஞே டோவாடெரா வெற்றி பெற்றுள்ளார்.

கிறிஸ்துவ பெரும்பான்மையினருடன் முஸ்லிம் மக்களையும் சேர்த்து சுமார் 50 லட்சம் மக்கள்தொகையை கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசில் செலேகா என்ற போராளிக் குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர்.

இதனால் நாடெங்கும் கலவரங்கள் தொடர்ந்தன. ஏராளமான மக்கள் தாக்குதல்களுக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். சர்வதேசப் பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அதிபர் மிகைல் ஜோடோடிடா தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதையடுத்து, பிரிவினைவாதம் மற்றும் வன்முறையால் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ள மத்திய ஆப்பிரிக்கா குடியரசின் பாராளுமன்ற தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடந்தது.

முன்னாள் பிரதமர்கள் அனிசெட் ஜியார்ஜஸ் டோலோகுவிலே, மார்ட்டின் ஸிகுயேலே உள்பட மொத்தம் 30 வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தேர்தலின் முடிவுகளை எதிர்த்து அந்நாட்டின் உச்சநீதி மன்றத்தில் ஆறு வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வாக்குப்பதிவின்போது தில்லுமுல்லு நடைபெற்றதாகவும், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய இவர்கள் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், தேர்தல் முறைகேடு தொடர்பாக நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியதால் ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சக்காரி ந்டுபா, நாடு முழுவதும் மீண்டும் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, மத்திய ஆப்பிரிக்க அதிபர் பதவிக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஃபாஸ்டின் அர்ச்சாஞே டோவாடெரா 62.71 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு முன்னாள் பிரதமரான அனிசெட் ஜியார்ஜஸ் டோலோகுவிலே 37.29 சதவீதம் வாக்குகளையே பெற்றார். வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட தில்லுமுல்லுகளே தனது வெற்றியை பாதித்ததாக குறிப்பிட்டுள்ள டோலோகுவிலே, எனினும் மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY