பிஜி தீவை 325 கி.மீ. வேகத்தில் சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு ஐந்து பேர் பலி – ஏராளமான வீடுகள் நாசம்

0
109

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு ஐந்து பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த புயலின் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிப் போய் கிடக்கின்றன. சுமார் ஒன்பது லட்சம் மக்கள் வாழும் இந்த தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடாக அமைக்கப்பட்டுள்ள 758 நிவாரண முகாம்களில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிஜிக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலிய மக்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஓட்டல் அறைகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

சேத நிலவரத்தை நேரில் சென்று பார்வையிடுமாறு மந்திரிகளையும், அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ள பிரதமர் பிராங்க் பைனிமராமா, நாடு முழுவதும் ஒருமாத காலத்துக்கு அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரப் பகுதிகளில் இருந்து புயல் சேத நிலவரங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வந்து சேரவில்லை. அந்த தகவல்கள் கிடைத்த பின்னர் உயிர்பலியும், சேத இழப்புகளும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY