ஏறாவூர் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி கமநல அபிவிருத்தி அலுவலகத்தை ஏறாவூரில் திறக்குமாறு வேண்டுகோள்

0
167

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி கமநல சேவைகள் அபிவிருத்தி அலுவலகத்தை ஏறாவூரில் திறக்குமாறு ஏறாவூர் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வேண்டுகோளை கடந்த பல வருடங்களாகத் தாம் முன் வைத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் ஏறாவூர் விவசாயிகள் தமது விவசாயம் சம்பந்தப்பட்ட அலுவல்களை முடித்துக் கொள்வதற்காக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மட்டக்களப்பு-பதுளைவீதிப் பகுதி கூமாச்சோலையில் அமைந்துள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஏறாவூர் – மீராகேணியிலுள்ள ஒரு விவசாயி கூமாச்சோலையிலுள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்வதாயின் சுமார் 10 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியுள்ளது.

அதேவேளை போக்கு வரத்து வசதி இல்லாததால் கிராமப் புறங்களிலுள்ள விவசாயிகள் ஏறாவூர் நகரப் புறம் வரை கால்நடையாகவே நடந்து வந்து கூமாச்சோலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஒரு விவசாயியின் நேர விரயம், பொருளாதார இழப்பு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு விவசாய விரிவாக்கற் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குரிய கமநல சேவைகள் அலுவலகத்தை ஏறாவூர் நகரில் அமைக்குமாறு ஏறாவூர் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

LEAVE A REPLY