சேரை சீண்டிய கெட்ட பொம்மன்

0
269

காட்சி: ட்ரபிக் போலிஸ் ஜாக்சன் துரையும், வீரபாண்டியனும் காரசாரமாக வார்த்தை மோதல் வசனங்கள்

இடம்: ஆமர் வீதி

ஜாக்சன் துரை: ம், நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?

வீரபாண்டிய கட்டபொம்மன்: நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?

ஜாக்சன் துரை: ஏது, ரோங் சைற்றில் வந்துவிட்டாய்?

வீரபாண்டிய கட்டபொம்மன்: ஆபிஸ் போக அவசரம் என்பதால் வந்தேன்.

ஜாக்சன் துரை: ஆனால் அதற்கேற்ற டிரைவிங் இல்லை உம்மிடம். உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

வீரபாண்டிய கட்டபொம்மன்: என்னவென்று?

ஜாக்சன் துரை: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.

வீரபாண்டிய கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்.

ஜாக்சன் துரை: எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம்பாவம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். கை போட்ட போது நிறுத்தவில்லை. பிடி பட்ட பின் பகா கொடுக்கவில்லை. வெகுகாலமாக வாகன வரிப்பணம் வந்து சேரவில்லை.

வீபாண்டிய கட்டபொம்மன்: வாகனம் என்னுடையது, வேகமும் என்னுடையது. உனக்கேன் கொடுப்பது பகா? எங்களோடு லீஸிங் கம்பனிக்கு வந்தாயா? லிப்ட் தந்தாயா? பிணை நின்றாயா? பெற்றோல் அடித்துத் தந்தாயா? களனி பாலம் புளக்கினிலே காட்சி தந்தாயா? ரோட்டோரம் அஞ்சி இருக்கும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சட் கோட்டை கடக்க உதவினாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? எதற்க்குக் கேட்கிறாய் பகா, யாரைக் கேட்கிறாய் ஜறாவ?

————————————————

காட்சி: கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்டு பேசும் வசனம்

கதாபாத்திரங்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், அதிகாரி பானர்மென்.

கட்ட பொம்மன்: வெயிலுக்குள் நிற்பவர்களே, உட்காருங்கள்… உட்காருங்கள்…

அதிகாரி பானர்மென்: அகமழியவில்லை உனக்கு. நிறுத்து, போதும் உன் பேச்சு. குற்றவாளியாகிய நீ ஏதேனும் செய்து குற்றத்தை குறைத்துக்கொள்ள முடியுமா என்று பார்.

கட்ட பொம்மன்: ஆ, குற்றத்தை குறைக்க எத்தனையோ வழிகளில் இருப்பதை அறிவேன். ஆகப்போகும் முடிவையும் உடனறிவேன்.

அதிகாரி பானர்மென்: நீ குற்றவாளி தானே?

கட்ட பொம்மன்: ஆம் ஜறாவ கொடுக்கத் தவறிய குற்றவாளி.

அதிகாரி பானர்மென்: அ, எடக்கு பேச்சு வேண்டாம். நேர்மையான பதில் தேவை. ட்ரபிக் பொலிஸ் கட்டளைக்கு நீ ஏன் அடங்கவில்லை?

கட்ட பொம்மன்: ட்ரபிக் பொலிஸ் என்பது போக்கு வரத்தை அடக்க வந்த ஒரு ஸ்தாபனம். அதற்குள் அடங்கவேண்டுவது சட்டங்கள், சன்மானங்கள் அல்ல.

அதிகாரி பானர்மென்: எடக்கு, மடக்கு, இறுமாப்பு, ஏளனம் இத்யாதி இத்யாதி உனக்கு மிக மிக அதிகம்.

கட்ட பொம்மன்: எல்லாம் உடன் பிறந்தவை.

அதிகாரி பானர்மென்: அது ஒடுக்கப்பட்டது.

கட்ட பொம்மன்: நடக்காது. நா இருக்கும்வரை எக்காலும் இறங்காது. உரக்க உரக்க மேலெழும்.

அதிகாரி பானர்மென்: லம்போகினி கார் இருக்கிறதே, அது கூட எங்களை கேட்டுத்தான் போகும் வரும்.

கட்ட பொம்மன்: அ, அந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே, லம்போகினியை ஓட்டியவரே விளக்க மறியலில் உள்ள கதையெல்லாம் இங்கு ஏற்கனவே ஏராளமாக இருக்கிறது. வேறு ஏதாவது இருந்தால் கூறு.

அதிகாரி பானர்மென்: ஏனைய வாகனக்க்காரர்கள் எல்லோரும் கொடுத்து விட்டார்கள், பலனடைகிறார்கள். நீ ஒருவன் மட்டும் கொடுக்க மறுப்பதால், அது உனக்கு ஒரு லாபமா?

கட்ட பொம்மன்: எல்லோரும் கொடுத்த பிறகு நான் ஒருவன் பணியாததால், அது உனக்கு ஒரு நஷ்டமா?

அதிகாரி பானர்மென்: சே, இவன் பேசத்தெரிந்தவன்.

கட்ட பொம்மன்: ஆம் பேசத்தெரிந்தவன். வெறும் பேச்சல்ல, வல்லவன், வாகனம் ஓட்டத் தெரிந்தவன். அதனால் தான் பகா கொடுத்து வாழவேண்டுமென்று இல்லாதிருப்பவன்.

அதிகாரி பானர்மென்: ‘சிக்னல் தலையன்’ என்று எனக்குப் பெயர். என்னிடமே பேசுகிறாய்.

கட்ட பொம்மன்: off பண்ண வேண்டிய பொருள். இந்த ரோட்டோ எல்லா குழப்பங்களையும் கண்ட ரோட்.. புளக் என்றால் பூரும் குணம், போக்கு வரத்தை மறித்து ஆர்ப்பாட்டம், VIP போவதென்றால் வேறு வாகனத்தை நிறுத்தல் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள்.

அதிகாரி பானர்மென்: போதும் உன் புத்திமதி. மேலும் மேலும் குற்றங்களை கூடுதலாக்கிக் கொண்டே போகிறாய். நான் இப்போதே தீர்ப்புக் கூறப் போகிறேன். லைசன்ஸ் மேல் ஆசை இருந்தால் உனக்காக ஒரு வினாடி ஒதுக்குகிறேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்.

கட்ட பொம்மன்: ஹ, நான் மன்னிப்பு கேட்பதா? என் லைஸன் பறிக்கப் பட்டது நான் நடு ரோட்டில் உன்னை முட்டாமல் இருக்க. என் தாய் கேட்டிருக்கவேண்டும் இதை. அவள் தள்ளாத வயதிலும் பொல்லாத டிப்பராக உன் மீது பாய்ந்திருப்பாள்.என் தம்பி கேட்டிருக்க வேண்டுமிதை, இந்நேரம் புகை கக்கும் ருக்மனி வண்டியை ஒட்டி உன் சுவாசத்தை சுருட்டி இருப்பான். என் தமிழ்ப்புலவன் மட்டும் இங்கு இருந்திருந்தால், ஹோர்ன் அடித்தே உன் ஆவியை கருக்கியிருப்பான்.

அதிகாரி பானர்மென்: இவனை கொண்டுபோய் சீரியல் நாடகத்தை பார்க்க வையுங்கள்

கட்ட பொம்மன்: ஐயையோ… நீங்க கேட்கிற தொகையை தாறன். என்னை விட்டு விடுங்க ஐயா!

(MOHAMED NIZOUS)

LEAVE A REPLY