மன்னார் புதைகுழிக்கு அருகில் உள்ள கிணற்றை தோண்ட உத்தரவு

0
166

இலங்கையின் வடமேற்கே, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில், மூடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிமன்றம் பொலிசாருக்கு இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த கிணறு மண் நிரப்பி மூடப்பட்டுள்ளதால், போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளே இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்ட்டுள்ளது.

அங்கு கிணறு ஒன்று இருந்ததை காவல்துறையினர் மறுத்து வந்த நிலையில், அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்ட நீதிபதி, கிணறு ஒன்று இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனை தோண்டுவதற்கான உத்தரவையும் பிறப்பித்திருந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை குறித்த கிணற்றை தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட போதிலும், கிணற்றை சுற்றி வெள்ளம் தேங்கியிருப்பதால், அந்தப் பணியைச் செய்ய முடியாதுள்ளது என்று மன்னார் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை உறுதிப்படுத்திய நீதிபதி ஆசிர்வாதம் கிரேஸியன் அலெக்ஸ்ராஜா, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி தோண்டும் பணிகளை மீண்டும் ஆரம்பித்து, 3 நாட்களுக்குள் அவற்றை முடிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கிணற்றுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து 82 பேரின் எலும்புகளும் உடல் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-BBC-

LEAVE A REPLY