இலங்கையின் சகல துறைகளுக்கும் அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும்

0
201

தற்போதைய இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் தெளிவோடு இருப்பதாகவும் இலங்கையின் பொருளாதார, வர்த்தக, தொழிற்பயிற்சி கல்வி ஆகிய சகல துறைகளிலும் முடியுமான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதாக ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்டர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சருக்குமிடையே நேற்று முந்தினம் (17) பிற்பகல் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, புதிய அரசாங்கம் பதவியேற்று ஒருவருடம் மாத்திரமே கழிந்துள்ள நிலையிலும் நீண்டகால பயணத்திற்கான அடிப்படை இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நல்லிணக்க செயற்திட்டங்களை வெற்றி கொள்வதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுமே இன்று அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரதானமான சவால்களாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தற்போது இரண்டு பிரதான நிறுவனங்கள் தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுகளினூடாக சகல மக்களுக்கும் நலநோம்புகை நடவடிக்கைளுக்காக அரசாங்கம் அர்ப்பணத்தோடு செயற்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் யுத்தத்திற்குப் பின்னர் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்லிணக்க செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தடைகள் என்ன என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி, இரண்டு பக்கத்திலும் இருக்கும் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் அதற்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்தார். அவர்கள் ஊடகச் சுதந்திரத்தை பிழையாகப் பயன்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகொள்ள முடியும் என நம்புகின்றீர்களா என ஜேர்மன் அமைச்சர் வினவியதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை வெற்றி கொள்வதற்கு தமக்கு முடியுமாக இருந்ததாகவும் எனவே இந்த செயற்திட்டங்களை வெற்றி கொள்வது முடியாதது அல்ல என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

தெற்கைப் போன்று வடக்கு மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உலக சந்தையில் இலங்கை உற்பத்திகளை அதிகரிக்கும் சவாலை வெற்றி கொள்வது தமது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி இதற்கு ஜேர்மனியின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு புதிய தொழிநுட்ப அறிவினூடாக உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஜேர்மன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததோடு, இலங்கையின் பிரதான ஏற்றுமதிப்பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னை கைத்தொழிற்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவி வழங்குமறு கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பிய சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதித்தடையை நீக்குவதற்கும் ஜீஎஸ்பி பிளஸ் நன்மைகளை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் ஜேர்மன் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமென தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜேர்மனியின் முன்னணி வர்த்தகர்கள் அடங்கிய ஒரு குழுவினர் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அதன்போது வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதாகவும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் தொழிற்பயிற்சித் துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜேர்மன் அரசாங்கம் மேலும் உதவிகளை வழங்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜேர்மன் நிதி உதவியின் கீழ் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தை எதிர்வரும் யூன் அல்லது யூலை மாதத்தில் திறப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாவும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

தமக்கு ஜேர்மனிக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தமைக்காக ஜேர்மன் வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY