மாத்தளை, உக்குவெல்ல பிரதேசத்தில் இஸ்லாமிய அமைப்புக்களிடையிலான மோதலின் போது மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தின் போது முச்சக்கரவண்டி ஒன்றும் பிக்கெப் வாகனம் ஒன்றும் சேதமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த உக்குவல இடத்திலேயே இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
உக்குவல, வரக்காமுற என்ற இடத்தில், தவ்ஹீத் இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கும் போது, எதிரே வந்த கோஷ்டி ஒன்றுடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த மோதலின் போது மூவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் சேதமடைந்த முச்சக்கரவண்டி பிக்காப் வாகனம் என்பன பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மெட்ரோ நியுஸ்)