அங்காராவில் குண்டுவெடிப்பு; 28 பேர் பலி

0
131

துருக்கியின் தலைநகர் அங்காராவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 61 பேர் காயமடைந்துள்ளனர்.

புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தில், ராணுவ பேருந்துகள் செல்லும்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் மற்றும் ராணுவத் தலைமையகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சத்தம் நகர் முழுவதும் கேட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் கொல்லப்பட்டவர்களில் சிலர் பொதுமக்கள். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மற்றொரு சம்பவத்தில் ஸ்வீடனின் தலைநகரம் ஸ்டாக்கோமில் துருக்கிய கலாச்சார மையம் அமைந்திருக்கும் கட்டடத்திற்கு அருகில் குண்டு வெடித்ததால் அந்தக் கட்டடம் சேதமடைந்தது. யாரும் காயமடையவில்லை.

இந்தச் சம்பவத்திற்கும் அங்காரா குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து அதிபர் எர்துவான், தன்னுடைய அஜெர்பெய்ஜான் பயணத்தை ரத்துசெய்திருக்கிறார். அதேபோல, ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கம் அகதிகள் பிரச்சனை குறித்து

விவாதிப்பதற்காக ப்ரஸ்ஸல்ஸில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லையென பிரதமர் தவுதோக்லு தெரிவித்திருக்கிறார்.

குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து கிடைத்த சந்தேகத்திற்குரிய பொதியை, பிறகு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர்.

சமீப சில மாதங்களாகவே துருக்கியில் தொடர்ச்சியாக பல தாக்குதல்கள் நட்தப்பட்டுவருகின்றன. மிகப் பெரிய தாக்குதல் ஏதும் நடத்தப்படக் கூடுமோ என்ற அச்சமும் அங்கே ஏற்பட்டிருக்கிறது.

அங்காரா தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியவில்லையென்றாலும் பாதுகாப்புப் படையினர் ஐஎஸ் மீதும் தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் மீதும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY