மீண்டும் சட்டத்தரணியாக மாறிய முன்னாள் ஜனாதிபதி

0
96

mahinda_court_004சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் ஏனைய நால்வரதும் பிணை மனுக்களை, எதிர்வரும் 29ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த ஐவரதும் பிணை மனு கோரிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடாவ இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன், கடுவலை நீதிமன்றத்தில் நடைபெறும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் நீதவான் அறிவித்தார்.

அதேவேளை, இன்றைய நீதிமன்ற அமர்வுகளின்போது முன்னாள் ஜனாதிபதியும் சட்டத்தரணியுமான மஹிந்த ராஜபக்ஷ தனது இளைய மகனின் பிணை தொடர்பான விசாரணைகளில் கலந்துகொண்டு வாதாடுவதற்கான தானே சட்டத்தரணி அவதாரம் எடுத்து நீதிமன்ற படிகளில் ஏறியுள்ளார்.

1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட மஹிந்த தொடர்ச்சியாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் தொழில்முறை சட்டத்தரணியாக செயற்படுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.

எனினும் இன்றைய தினம் தனது இளைய மகனை பிணை எடுப்பதற்காக அவர் சட்டத்தரணி அவதாரம் எடுத்திருந்தார்.

எனினும், யோஷித ராஜபக்ஷவிற்கான பிணை தொடர்பான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பியதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் நிதி மோசடி குற்றச்சாட்டில், யோஷித உள்ளிட்ட ஐவர் கடந்த மாதம் 30ஆம் திகதி நிதிக்குற்ற தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY