டோனால்டு டிரம்ப் அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா கருத்து

0
186

தனக்குப் பிறகு அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று கூறிய அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

“டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன். அமெரிக்க மக்கள் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை இருப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க அதிபராக இருப்பது என்பது மிகவும் சீரியசான பணி என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே நான் கருதுகிறேன்.

அதிபராவது ஏதோ, ரியால்டி ஷோ அல்லது டாக் ஷோ நடத்துவது போன்ற விவகாரம் அல்ல அதிபர் பதவி என்பது. இது ஏதோ பதவி உயர்வும் அல்ல. மார்க்கெட்டிங்கும் அல்ல” என்று ஒபாமா அமெரிக்க-ஆசியன் உச்சி மாநாட்டில் கலிபோர்னியாவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “டிரம்ப் பயன்படுத்தும் அரசியல் சொல்லாடல் அவருடன் மட்டும் நின்று விடுவதில்லை. ஆனால் அனைவரும் டிரம்ப் மீது கவனம் செலுத்துவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. காரணம் மற்ற வேட்பாளர்கள் கூறுவதை இவர் ஆர்வமூட்டும் ஒரு மொழியில் வெளிப்படுத்துவதே என்று நான் கருதுகிறேன்.

இவர் தனது முஸ்லிம் விரோத ஜோடனைப் பேச்சுக்கள் மூலம் கருத்தொருமித்தலை அதிகரிக்கலாம், ஆனால் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பேசுவதும் பிரச்சினையாகவே உள்ளது” என்றார்.

மற்றொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்கோ ருபியோ பற்றி ஒபாமா கூறும்போது, “புளோரிடாவின் இந்த செனேட்டர், குடியேற்றம் குறித்த மசோதா ஒன்றை ஸ்பான்சர் செய்தார், ஆனால் அதிலிருந்து அவரே தற்போது விலகி வேகமாக ஓடிவிட்டார்.

மேலும் அனைத்து குடியரசுக் கட்சியினரும் அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. இதுதான் சர்வதேச நாடுகளுக்கு பெரிய பிரச்சினை.

மற்ற நாடுகள் அமெரிக்காவை அறிவியல், காரண காரிய பகுத்தறிவு, மற்றும் நடைமுறை அறிவுடையவர்கள் என்றே கருதுகின்றனர். ஏனெனில் பெரிய பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடவில்லை எனில் ஒருவரும் தலையிட மாட்டார்கள் என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன.

ஆகவே இது ஏதோ டிரம்ப் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல, மற்ற குடியரசுக் கட்சியினர் என்னென்ன பேசி வருகின்றனர் என்பதையும் பாருங்கள். ஏதாவது கூறி தினமும் செய்தியில் இடம்பெற வேண்டும் என்ற அணுகுமுறை ஒத்துவராது” என்றார்.

ஆனால் டிரம்ப், மறுபுறம் ஒபாமாவை கடுமையாக தாக்கி வருகிறார், அதாவது ஒபாமா அரசு தேசப்பாதுகாப்பு, மருத்துவத்துறை, குடியேற்றத்துறை ஆகியவற்றுக்கு செலவிடும் தொகைகளைப் பாருங்கள் என்றும், நாம் ஐஎஸ் பயங்கரவாதத்தை ஒருநாளும் முறியடிக்க முடியாது என்றும் ஒபாமாகேர் ஒரு மோசமான திட்டம் என்றும், ஆட்சிக்கு வந்தால் ஒபாமாகேர் இருக்காது என்றும் பேசி வருகிறார்.

LEAVE A REPLY