மனித உழைப்பை இயந்திரங்கள் கைப்பற்றிக் கொண்டதால் ஆரோக்கியம் இழக்கப்பட்டு விட்டது: அஸீம்

0
67

மனித உழைப்பை இயந்திரங்களிடம் விட்டு விட்டதால் ஆரோக்கியக் கெடுதலும் சூழல் பாதிப்பும் ஏற்பட்டு ஒரு நச்சுச் சூழலுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இவ்வாறு ஏறாவூர் நகர மிச்நகர் பகுதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸீம் தெரிவித்தார்.

கிராம மக்களுக்கு சுய தொழில் பொருளாதார அபிவிருத்தி பற்றிய விழப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை 17.02.2016 மிச் நகர் கிராமத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

வீட்டுத் தோட்ட உற்பத்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

நவீன தொழினுட்ப உபகரணங்கள் சிலவேளை மனிதர்களை சோம்பேறிகளாக்கி விட்டிருக்கும் நிலைமையை நாம் காண்கின்றோம். கிணற்றிலே நீர் எடுப்பதிலிருந்து கறிக்கு மரக்கறி அரிவது வரையில் எல்லாவற்றுக்கும் மின்சார உபகரணங்களையே பயன்படுத்துகின்றோம்.

இதனால் பொருளாதார இழப்புக்கள் ஏற்படுவது ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் ஈடு செய்ய முடியாத மனித ஆரோக்கியம் கெட்டு விடுகின்றது. அதன் காரணமாக நம்மில் பலர் நோயாளிகளாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

100 மனித உழைப்பாளிகள் செய்த நெல் அறுவடை போன்ற விவசாய வேலைகளை இப்பொழுது அரை மணி அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரு இயந்திரம் செய்து விடுகின்றது. இப்பொழுது இயற்கையை அதன் தூய்மையான இயற்கைத் தன்மையுடன் அனுபவிக்க முடிவதில்லை, நிலமும், நீரும், காற்றும் மாசுபடுத்தப்பட்டுள்ளதால் நம்மில் சிறுவர் தொடக்கம் வயோதிபர் வரை அனைவரும் நோயாளியாகிக் கொண்டிருக்கின்றோம்.

இரசாயன நஞ்சு கலந்த விவசாய உற்பத்தி உணவுப் பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்கி அவற்றை மின்சார இயந்திரங்களால் சமைத்து உட்கொண்டு விட்டு நோயாளியாகிய பின்னர் நோயைத் தீர்ப்பதற்கு அதிக பணம் செலவழிக்கின்றோம்.

அந்த நாட்களில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் மருந்தாகவே உணவை உட்கொண்டார்கள். அவர்களது உணவுத் தெரிவு புத்திசாலித் தனமாக இருந்தது.

நாம் இரசாயன நஞ்சு கலந்த உணவை வேறாக வாங்கி உட்கொண்டு விட்டு மருந்தை வேறாக வாங்கி சுகம் பெற முயற்சிக்கின்றோம். இந்தப் போக்கு மாறவேண்டுமானால் நாம் பழையபடி உடல் உழைப்புக்கும் நஞ்சு கலக்காத உற்பத்திக்கும் திரும்ப வேண்டும்” என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY