“அரசியல்வாதிகளுக்கு கிடைக்கின்ற மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை” பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்

0
291

“பொதுப்பணத்தில் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை செய்து விட்டு அதில் தனிப்பட்ட பல சுய இலாபங்களையும் பெற்றுக்கொள்கின்ற அரிசியல் வாதிகளுக்கு கிடைக்கின்ற வரவேற்பும் மரியாதையும், சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்ற பணியில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து பாடுபடுகின்றவர்களுக்கு கிடைப்பதில்லை.” என பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளுடனான கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட்கிழமை (15.02.2016) NFGG யின் பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் சிறப்புரை ஒன்றினை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“நமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நேரடி அரசியல் பணிக்கு பத்து வருட வரலாறு காணப்படுகின்ற போதிலும், எமது கல்விப்பணிக்கு சுமார் 30 வருட வரலாறு உள்ளது. அதன் பின்னணியில்தான் நாம் இன்றும் நமது மக்களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் இன்று நமது சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்ற பணியில் மிகவும் அடிமட்டத்தில் பாடுபடுகின்ற பலரும் சமூகத்தால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். முன்பள்ளி ஆசிரியைகள், பாடசாலை ஆசிரியர்கள், குர் ஆன் மத்ரசாக்களில் கடமையாற்றும் முஅல்லிம்கள் என பலரும் இதில் அடங்குகின்றனர்.

பரீட்சைகளில் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றுக் கொள்கின்ற அல்லது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்ற பல மாணவர்கள் இன்று பல நிறுவனங்களினாலும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். இது உண்மையில் செய்யப்படவேண்டிய ஒன்றாகும். எனினும் இவர்களின் வெற்றிப் பயணத்திற்கு அர்ப்பணிப்புடனும் பல தியாகங்களுக்கு மத்தியிலும் பாடுபடுகின்ற ஆசிரியர் சமூகத்தினை அனைவரும் மறந்து விடுகின்றனர்.

அதே போன்று எமது பாடசாலைகள், பொது வைத்தியசாலைகள் போன்ற சமூக சேவை நிறுவனங்களுக்கு தங்களது பெறுமதியான நிலங்களை நன்கொடையாக வழங்கி இன்றுவரை சிறந்த சமூக உருவாக்கத்திற்காக பங்களிப்புச்செய்த பல பிரமுகர்களையும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது.

அவர்களின் பெயர் தாங்கிய வீதிகளையோ, பெயர்ப்பலகைகளையோ, மண்டபங்களையோ குறித்த நிறுவனங்களில் கூட காணமுடியாதுள்ளது. நமது பாடசாலைகள் , வைத்தியசாலைகள் , பள்ளிவாயல்கள் என்பவற்றுக்கு பல கோடி பெறுமதியான தமது சொந்த காணிகளையும் பணத்தினையும் வாரி வழங்கிய பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் எம்மத்தியில் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் சமூகம் சார்பாக கண்டுகொள்ளப்படாத , மறக்கடிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

ஆனால் இன்றுஉயர்ந்த வரவேற்புகளும் ஆலாபனைகளும் யாருக்கு கிடைக்கின்றது…? பொது மக்களின் பணத்தில் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை செய்து விட்டு அதில் தனிப்பட்ட பல சுய இலாபங்களையும் பாரியளவில் பெற்றுக்கொள்கின்ற அரிசியல் வாதிகளுக்கே இந்த வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டுகின்றன. இந்த நிலமை மாற்றப்பட வேண்டும்.

எமது பிரதேசத்தில் தங்களது அறிவு, ஆற்றல்கள், பொருளாதார ரீதியாக சமூகப்பணிகளை ஆற்றிய ,ஆற்றிக்கொண்டிருக்கின்றவர்கள் நிச்சயம் கௌரவிக்கப்பட வேண்டும்.அவ்வாறான பணியினை நாம் 1990 காலப்பகுதியிலிருந்தே செய்து வருகிறோம். இப்பொழுதும் அவ்வாறான ஒரு செயற்திட்டத்தினையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். கடந்த சில மாதங்களாக இவ்வாறு சமூகத்தில் கண்டு கொள்ளப்படாத பல பிரிவினர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை முடியுமானவரை தீர்க்கும் பணியினை NFGG தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது . அதில் ஒரு பகுதியாகவே முன்பள்ளி ஆசிரியைகளுடனான இன்றைய கலந்தரையாடலினை நாம் மேற்கொண்டிருக்கிறோம் .இன்று கலந்துரையாடப்பட்ட பிரச்சனைகளுக்கான இடைக்காலத்தீர்வுகள் சிலதை அடுத்த சில வார காலத்திற்குள் நாம் முன்னெடுப்போம். அவற்றிற்கான நிரந்தரத்தீர்வுகளை பெற்றுத்தரவும் நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம். “

இந்நிகழ்வில் NFGGயின் மட்டக்களப்பு பிராந்தியசபையின் செயலாளர் MACM ஜவாஹிர் ,மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள், NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY