12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி நிறைவு: இலங்கை இரண்டாமிடத்தில்

0
251

12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கோலாகலமாக இன்று(16) குவாத்தி நகரிலுள்ள இந்திராகாந்தி மெய்வல்லுனர் அரங்கில் இடம்பெறும் என இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து நாடுகளின் வீரர்களின் அணி நடையும் இடம்பெறும்.

இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் தருன் கோகி, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சொன்வால், இலங்கை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் விசேட அதிதியாகவும் கலந்து கொள்கின்றனர். இறுதி நாள் நிகழ்வில் இந்திய கலை நிகழ்வுகளும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அசாம் மாநிலத்தின் கலாசார நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அத்துடன் பெலிவுட் நடிகர்களின் இசை, நடன, பாடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இலங்கை 25 தங்கம், 57 வெள்ளி, 87 வெண்கலமுமாக மொத்தம் 169 பதக்கத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியா 160 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 276 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் 2019 ஆம் ஆண்டு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

12 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் விஷேட அதிதியாக கலந்து கொள்வதற்காக சென்றிருந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற கபடி போட்டியில் இலங்கை ஆண் மற்றும் பெண் கபடி அணியினர் 18–16 புள்ளிகள் பெற்றே 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றனர். கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதேசமயம் இலங்கை வீரர்கள் பங்குபற்றும் போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ருவன் சந்திர உள்ளிட்டோர் நேரடியாக சென்று வீரர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

பிரதியமைச்சர் ஹரீஸ் சிலோங் நகரில் இடம்பெறும் போட்டிகளையும் சென்று பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்டுத்தினார். 17 ஆம் திகதி இலங்கை செல்லும் வீரர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட அணி நேற்று இலங்கை சென்றடைந்தது.

LEAVE A REPLY