பிராவோ உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார்

0
183

டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இருபது-20 உலகக் கிண்ண மேற்கிந்திய அணியில் இருந்து விலகுவதாக முன்னணி வீரர் டெரன் பிராவோ அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணியினருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கும் இடையில் சம்பளப் பிரச்சினை இடம்பெற்ற சூழலிலேயே பிராவோவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது நீண்ட நாள் இலக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாகும் என்று பிராவோ குறிப்பிட்டுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள இருபது-20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணி அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் இழுபறியில் இருந்தது. பிப்ரவரி 14ஆம் திகதிக்குள் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், மாற்று அணி ஏற்பாடு செய்யப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்தது. அதன்படி முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேரில் 12 பேர் போட்டியில் கலந்துகொள்ள கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போட்டியின்போது காயம் அடைந்த பொல்லார்ட் அதில் இருந்து முழுவதுமாக மீண்டு வராத காரணத்தால் இருபது-20 உலகக் கிண்ண போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சர்வதேசத் தடை விதிக்கப்பட்டுள்ள சுனில் நரைன் பந்து வீச்சு முறையில் போதிய அளவு மாற்றம் ஏற்படாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகினார். இந்த இருவரோடு புதிதாக டேரன் பிராவோ-வும் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY