இப்பொழுது அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையினை பயன்படுத்தி ஒன்றுபட்ட சமூகத்தினை உருவாக்கிக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி. நாவின்ன

0
188

இப்பொழுது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையினை பயன்படுத்தி ஒன்றுபட்ட சமூகத்தினை உருவாக்கிக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா செலவில் அமைக்க்பட்ட மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திற்குரிய பிரதேச கலாசார நிலையம் வெல்லாவெளியில் செவ்வாய்க்கிழமை 16.02.2016 திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையத்தைத் திறந்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இலங்கையில் இப்பொழுது வித்தியாசமான அரசியல் நிலைமை காணப்படுகின்றது.சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருக்கின்றார். ஐ.தே.க.வை சேர்ந்தவர் பிரதமராக உள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சியாக உள்ளார். இதுதான் புதுமையான அரசியல். இப்படி இருப்பதுதான் எமக்குத் தேவை.

நாங்கள் எங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். 30 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாங்கள் ஒன்றுபட்டு மீண்டும் யுத்த நிலைமை ஏற்படாத வகையில் செயற்பட்டு வருகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கலைத்துறையினை மேம்படுத்தி அதன் மூலம் இனங்களுக்கிடையே ஐக்கியத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேறுபட்ட கலாசாரங்களை நாங்கள் கொண்டிருந்தாலும் கலை கலாச்சாரங்களினூடாக இனங்களுக்கிடையே நல்லுறவு கட்டியெழுப்பப்பட வேண்டும்.” என்றார்.

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் பிரதீபா சேரசிங்ஹ, கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY