(INNALILLAH) ஒரே நாளில் இஸ்ரேல் படையினரால் ஐந்து பலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

0
140

ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் ஜெரூசலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பதின்ம வயதினர் மூவர் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிறிதொரு சம்பவத்தில் இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் 14 வயது பலஸ்தீன சிறுமி இஸ்ரேலிய வீரர்களின் துப்பாக்கிச் சூட்டால் படுகாயத்திற்கு உள்ளானார்.

எனினும் இந்த சம்பவங்களில் எந்தவொரு இஸ்ரேல் வீரருக்கும் காயம் ஏற்படவில்லை.

அண்மைய மாதங்களில் நீடிக்கும் பலஸ்தீனர்களின் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் வாகனத்தை மோதவிட்டு நடத்தும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 176 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையினர் மற்றும் யூத குடியேறிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதை பலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. இதே காலப்பிரிவில் பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் 26 இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது ஞாயிறன்று இடம்பெற்ற முதல் சம்பவத்தில், மேற்குக் கரையின் வட பகுதியில் ஜெனின் நகருக்கு அருகால் கடந்து செல்லும் கார் வண்டிகள் மீது இரு சிறுவர்கள் கல்லெறிந்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்நேரத்தில் அங்கு வந்து ரோந்து படையினர் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சு நடத்த ஆரம்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பதிலுக்கு படையினர் அந்த இரு பலஸ்தீனர்கள் மீதும் துப்பாக்கிச்சூட நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கும் இருவரும் 15 வயது கொண்டவர்களாவர்.

இதனைத் தொடர்ந்து ஜெரூசலத்தின் நுழைவாயிலில் இருக்கும் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதித்துக் கொண்டிருந்த அதிகாரிகளை நோக்கி கத்தியுடன் ஓடி வந்த பலஸ்தீன இளைஞர் ஒருவர் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

பத்லஹாம் நகரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற மூன்றாவது சம்பவத்தில் இரு பலஸ்தீனர்கள் ஜெரூசலம் பழைய நகருக்கு வெளியில் இஸ்ரேல் பொலிஸார் மிது தானிக்க துப்பாக்கிகள் கொண்டு சூடு நடத்தியதை அடுத்தே இருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவரும் தமது இருபது வயதுகளில் இருப்பவர்கள் என்று இஸ்ரேல் பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில் ஹெப்ரூன் நகரின் இப்ராஹிமி பள்ளிவாசலுக்கு அருகில் 14 வயது சிறுமி ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சிறுமி இஸ்ரேலிய சோதனைச்சாவடி பகுதியில் தனது சகோதரியுடன் சென்றுகொண்டிருந்த வேளையில் படையினரை விட்டு வெளியேறும்போது சுடப்பட்டதாக சம்பவத்தை பார்த்தவர்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்திச் சேவையான மஆன் குறிப்பிட்டுள்ளது.

யஸ்மின் ரஷாட் அல் சரு என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அந்த சிறுமி மீது இஸ்ரேல் படையினர் ஆறு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக மஆன் செய்தி குறிப்பிடுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமையும் ஹெப்ரூன் பள்ளிவாசலுக்கு அருகில் 18 வயதான பலஸ்தீன யுவதி ஒருவர் கத்திக்குத்துக்கு முயன்றதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்ராஹிமி பள்ளிவாசல் பகுதி யூதர்களினதும் புனிதத் தலமாக உள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் தொடரும் இந்த பதற்ற சூழல் பல மாதங்களாக எந்த ஒரு தொய்வும் இல்லாமல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Thinakaran)

LEAVE A REPLY