வரலாற்றில் ஓர் ஏடு நிகழ்ச்சி தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பதிந்து விட்டது: கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர்

0
232

“முஸ்லிம் நேயர்களை மட்டுமல்ல தமிழ் மக்களையும் வானொலியை விட்டு நகர விடாமல் ஒட்டு மொத்தமான வானொலி நிகழ்ச்சிக்கே சிகரம் வைத்தாற்போல அமைந்திருந்தது அந்த நாட்களில் ஒலிபரப்பான ஏ.சி.ஏ.எம். புஹாரி அவர்களின் குரல்வழி வந்த வரலாற்றில் ஓர் ஏடு என்றால் அது மிகையாகாது” என கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் தெரிவித்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி, கலாபூஷணம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தழிழ்-இஸ்லாம் பாட முன்னாள் நூலாக்கக் குழு உறுப்பினருமான ஏ.சி.ஏ.எம். புஹாரி அவர்களின் “வரலாற்றில் ஓர் ஏடு” நூல் வெளியீடு சனிக்கிழமை 13.02.2016 மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரலாற்றில் ஓர் ஏடு நூலுக்கு சிறப்புரை வழங்கிய ரூபி வலன்ரீனா மேலும் உரையாற்றியபோது,

1972 ஜுலை 2 ஆம் நாள் இரவு 8.55 இற்கு ஒலிபரப்பாகத் தொடங்கிய ஏ.எசி.ஏ.எம். புஹாரி அவர்களின் “வரலாற்றில் ஓர் ஏடு” நிகழ்ச்சி முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ் நெஞ்சங்களையும் கட்டிப் போட்டது.

அவரது குரல் வசீகரமும் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டிய மனித குலம் அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் அமைந்த வரலாற்றுக் குறிப்புகளும் இன்றளவும் எல்லோர் நெஞ்சிலும் நீங்காத இடம்பிடித்துள்ளன.

அவரால் தொகுத்து வழங்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் வாழத் தேவையான பல்வேறு பண்புகளைப் பற்றி நமக்குப் போதிக்கின்றன.

மொழி வளம் சிதையாமல், கலப்பற்ற தமிழில் தெளிவான உச்சரிப்புடன், குரழ்வழியாக காட்சிப் படிமங்களைக் கண்ணெதிரே கொண்டு வந்த பெருமை வரலாற்றிலோர் ஏடு புகழ் புஹாரியைச் சாரும்.

வானொலியில் சலிக்காமல், சன்மானம் ஏதுமின்றி சன்மார்க்கப் பணி செய்த மௌலவி புஹாரி அவர்களுக்கான நின்று நிலைக்கும் சன்மானத்தை இறைவன் அவருக்கு இப்பொழுது வழங்கி இருக்கின்றான். அதுதான் இன்றளவும் அவரை தமிழ் பேசும் வானொலி நேயர்கள் நினைவில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பாராட்டையும் புகழையும் ஒருபோதும் பணத்தினால் பெற்றுவிடவோ அதனைத் தக்க வைத்துக் கொள்ளவோ முடியாது.” என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் ஐ.எல். மாஹிர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.எம். அப்துல் அஸீஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமீர், மற்றும் பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள், உட்பட புத்திஜீவிகள், வானொலி நேயர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

LEAVE A REPLY