கிழித்தெறிந்தவரிடமே ஒட்டும் செயற்பாடுகள் கையளிப்பு: சட்டத்தரணி லயனல் குருகே

0
234

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுத்திட்டத்தினை கிழித்தெறிந்த ரணில் விக்ரமசிங்ஹவிடம் புதிய தீர்வுத்திட்டம் உருவாக்கும் செயற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதே விதியின் நடவடிக்கையென மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு பொதுமக்களின் கருத்துகளை வழங்கும் வகையில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பில் துவக்கி வைத்து அவர் உரையாற்றினார்.

மாற்றுக்கொள்கைளுக்கான நிலையம், அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி அமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம திட்டமிடல் அமைப்பு என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில புத்திஜீவிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கிராம திட்டமிடல் அமைப்பின் திட்ட இணைப்பாளர் எஸ். ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே மற்றும் அரசியல் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் மூன்று அரசியலமைப்புகளின் கீழ் ஆட்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவற்றில் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

சிறுபான்மை மக்களுக்கு சிறந்த அரசியலமைப்பாக சோல்பரி ஆட்சியமைப்பினை கொள்ளமுடியும். சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை இல்லாமல் செய்யப்பட்டன. 1956ஆம்ஆண்டு சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழ் பேசும் சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியது.

இது தொடர்பில் அன்று பிரித்தானியாவில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அந்த வழக்கு வெற்றி பெற்றிருந்தால் இன்று இந்த நாட்டில் இன முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருக்காது.

1972ஆம் ஆண்டு இந்த நாட்டில் பெடரல் கட்சியின் தலைமைத்துவத்துடன் அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அது சிங்கள அரசியலமைப்பாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அரசியலமைப்பில் மதம் மற்றும் மொழி தொடர்பான விடயங்களில் ஏனைய இனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் பாதிப்பினை நாங்கள் இன்றுவரை அனுபவித்து வருகின்றோம்.

அதன் பின்னர் 1978ஆம்ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. 06வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு சிறுபான்மை சமூகத்தினை அப்புறப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேபோன்று இலங்கை இந்திய தீர்வுத்திட்டம் மூலம் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சிறந்த தீர்வு ஒன்றினை முன்வைக்கப்பட்டது. அதனை சில தமிழ் தலைவர்களும் பேரினவாதிகளும் எதிர்த்தனர். ஐ.தே.கட்சியின் ஒரு சாராரும் எதிர்த்தனர்.

எனினும் அந்த தீர்வுதிட்டம் மூலம் மாகாணசபை முறைமையொன்று இந்த நாட்டில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அதன்மூலம் இன்று மாகாணசபை பற்றி கதைக்கப்படுகின்றது.

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் சிறந்த தீர்வுத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அவை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ரணில் விக்ரமசிங்ஹவின் தலைமையிலான ஐ.தே.கட்சி ஆகியோரால் கிழித்து தீயிட்டு கொழுத்தப்பட்டது.

அன்று அந்த தீர்வினை கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்ஹவே இன்று புதிய தீர்வுத்திட்டத்தினை தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதே விதியின் செயற்பாடாகும்.

இன்று ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக கதைக்கப்படுகின்றது. அது தொடர்பில் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் பெறப்படுகின்றன. இதன் மூலம் அனைத்து தரப்பினரையும் ஒன்றுபடுத்தி ஒரு சிறந்த அரசியல் தீர்வினை முன்வைக்க முடியும்.

கடந்த காலத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக வந்தபோது தெற்கில் பல போராட்டங்கள் பேரினவாதிகளினால் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக வந்தபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக சிங்கள் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர், தற்போதைய நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு வரவேற்புகள் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள இனவாதிகளின் செயற்பாடுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மக்களின் கருத்துகளைப் பெற்று அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனைத்து இன மக்களும் வரவேற்றுள்ளனர் என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY