உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிக்கு கொலைக் குற்றச்சாட்டு வழக்கு

0
188

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, விபத்து மரணம் என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் இனிமேல் கொலைக் குற்றம் என்று வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் யோசனை முன்வைத்துள்ளார்

அத்துடன் வீதிப் போக்குவரத்தின் போது பஸ்ஸின் மிதி பலகையில் நின்றவாறு ஏனைய வாகனங்களை முந்தி செல்ல முயற்சிக்கும் நடத்துநர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக கொலைக்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது அதி உச்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படும் என்பதை இலங்கை குற்றவியல் சட்டக் கோவை சுட்டிக்காட்டுகின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சின்னட்டி சண்முகம் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படக் காரணமான வாகானச் சாரதி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டார். அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபா நட்டஈடும், 16 ஆயிரத்து 500 ரூபா நீதிமன்ற அபராதமும் விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த நபர் தமது சாரதி அனுமதிப் பத்திரத்தை மீள வழங்குமாறு கோரி, யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம்(11) யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, வாகானச் சாரதிகளுக்கான வீதிப் போக்குவரத்து விதிகள் தொடர்பில் கண்டிப்பான விடயங்களை சுட்டிக்கா ட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி விபத்துக்கள் தொடர்பில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற யோசனைகளையும் முன் வைத்தார். இதன்போது யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்ததாவது,

சில வருடங்களுக்கு முன், பொல்காவலையில் ரயில் வரவிருந்ததையடுத்து ரயில் பாதை மூடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த பாதை ஊடாக வாகனத்தைச் செலுத்திய பஸ் சாரதி, நடத்துநர் இருவருக்கும் எதிராகக், கொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்ற விபத்தை ஏற்படுத்தும் சாரதிக்கும் நடத்துநருக்கும் எதிராகக் கொலை வழக்குகள் தாக்கல் செய்யப்படவேண்டும்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகளும் தனியார் பஸ் சாரதிகளும் பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகவுள்ளனர். அவர்களுக்கு அரச நிர்வாக அதிகாரிகளால் பல தடவைகள் ஆலோசனை வழங்கப்பட்டும் அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு தனியார் பஸ்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை தனியார் பஸ் உரிமையாளர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். பஸ்களின் மிதிபலகையில் நின்றவாறு மற்றைய வாகனங்களை முந்திச் செல்வதற்கு உதவியளிக்கும் அனைத்து நடத்துநர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவர். தனியார் பஸ் சாரதிகள் வேகமாக போட்டிக்கு பஸ்களைச் செலுத்தி ஒரு வாகனத்தை மற்றைய வாகனம் முந்திச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டால், குறித்த தனியார் பஸ்களின் போக்குவரத்து உரிமம் நீதிமன்றால் இரத்துச் செய்யப்படும்.

அத்துடன் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படும். அத்தகைய பஸ்கள் அனைத்தும் பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாது என்ற கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் நீதிமன்று இறுதி எச்சரிக்கை செய்கிறது.

-Thinakaran-

LEAVE A REPLY