இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி

0
57

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியா–மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷிம்ரோன் ஹெட்மியூர் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன் படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கத்திலே இந்திய அணி திணற ஆரம்பித்தது. தொடக்க வீரர் ரிசப் பன்ட் 1 ஓட்டங்களிலும், அன்மோல்பிரீத் சிங் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, அணித்தலைவர் இஷான் கிஷன் 4 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து வந்த சென்னை வீரர் வாஷிங்டன் சுந்தர் (7), அர்மான் ஜாபர் (5), மகிபால் லொம்ரோர் (19), மயாங்க் டாகர் (8) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய சர்பிராஸ் கான் மட்டும் அரைசதம் அடித்தார். அவர் 89 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அவெஸ் கான் (1), ராகுல் பாதம் (21) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இந்தியா 45.1 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், அல்ஜானி ஜோசப், ரியான் ஜான் தலா 3, கீமோ பால் 2, ஹொல்டர், ஸ்பிரிஞ்சர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

5 விக்கெட்டுகளால் வெற்றி:

இதன் பிறகு 146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் 77 ஓட்டங்களுக்கே அந்த அணி 5 விக்கெட் இழந்து திணறியது. இதனால் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது.

ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த கேசி கார்டி, கீமோ பால் நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

கேசி கார்டி 52 ஓட்டங்களும், கீமோ பால் 40 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் மயாங்க் டாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய கேசி கார்டி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர் ஆட்டநாயகனாக வங்கதேச வீரர் மெஹிடி ஹாசன் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY