மத்திய ஆப்பிரிக்க பாராளுமன்றத்துக்கு இன்று மறுதேர்தல்

0
115

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மத்திய ஆப்பிரிக்காவில் காலகாலமாக மதங்களின் அடிப்படையில் நிகழ்ந்துவரும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அங்கு ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டும் வகையிலும், இன்று அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கான மறுதேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிறிஸ்தவ பெரும்பான்மையினருடன் முஸ்லிம் மக்களையும் கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசில் செலேகா என்ற போராளிக் குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர்.

இதனால் நாடெங்கும் கலவரங்கள் தொடர்ந்தன. ஏராளமான மக்கள் தாக்குதல்களுக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். சர்வதேசப் பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அதிபர் மிகைல் ஜோடோடிடா தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதையடுத்து, பிரிவினைவாதம் மற்றும் வன்முறையால் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ள மத்திய ஆப்பிரிக்கா குடியரசின் பாராளுமன்ற தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடந்தது.

முன்னாள் பிரதமர்கள் அமிசெட் ஜியார்ஜஸ் டோலோகுவிலே, மார்ட்டின் ஸிகுயேலே உள்பட மொத்தம் 30 வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து அந்நாட்டின் உச்சநீதி மன்றத்தில் ஆறு வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வாக்குப்பதிவின்போது தில்லுமுல்லு நடைபெற்றதாகவும், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய இவர்கள் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தினர்.

தேர்தல் முறைகேடு தொடர்பாக நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதால் கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சக்காரி ந்டுபா, நாடு முழுவதும் மீண்டும் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, மத்திய ஆப்பிரிக்க அதிபர் பதவிக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில், இன்று காலையில் இருந்து இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

LEAVE A REPLY