அவர்களை மின்சாரக் கதிரையில் இருந்து நாமே காப்பாற்றினோம்: ஜனாதிபதி

0
97

சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்ளும் தருணத்தில் சிலர் ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஜனாதிபதி தெரிவித்ததாவது,

அரசாங்கம் தொடர்பில் சிலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் என்னுடன் கலந்துரையாடியபோது, இதுவே உலகின் அழகான நாடு, இத்தகைய அழகான நாடுகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளன என்றும், உங்களது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் நாம் எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கருத்திற்கும் இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்தார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி பத்திரிகைகளில் ஒரு அறிவித்தலை விடுத்திருந்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணைக்கு நாம் இணங்கியமை ஆங்கிலேயர் ஆட்சியில் 1815 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை விடவும் நாட்டைத் தாரைவார்க்கும் செயல் என அவர் கூறியிருந்தார். 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையை அவர் வாசித்துள்ளாரா, இல்லையா என எனக்குத் தெரியாது. தம்மை போர் குற்றத்திற்காக மின்சாரக் கதிரையில் அமர்த்தப் போகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி முன்னர் கூறிவந்தார். அவர்களை மின்சாரக் கதிரையில் இருந்து நாமே காப்பாற்றினோம் என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூற வேண்டும். புதிய அரசாங்கம் காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்தன.

-NF-

LEAVE A REPLY